‘கொரோனா’ வைரஸ் இருந்தது கண்டுபிடிப்பு: இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு சென்ற செவிலியர்கள் 30 பேரிடம் மருத்துவ சோதனை

ரியாத்: சீனாவின் வுஹான், பீஜிங் நகரங்களில் பரவி வரும் ‘கொரோனா’  வைரசால் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள தாய்லாந்து நாட்டுக்கும் இந்த வைரஸ்  பரவி வருகிறது. இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது என கண்டறியப்படவில்லை. விலங்குகளிலிருந்து மனிதருக்கு வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்த வைரஸ் குறித்து ஆராய்ந்து வரும் சீன மருத்துவ நிபுணர்கள்  தெரிவிக்கின்றனர். சீனாவில் உள்ள 45 வயது இந்தியப் பெண்ணுக்கு இந்த வைரஸ் பாதித்துள்ளது.

சீனாவுக்கு அருகில் இருப்பதால் இந்த வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கைகளை மாநில அரசுக்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளது. இவ்வகை வைரசை கண்டறிய புனேவில்  உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் சில நிறுவனங்களும் தயாராக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, இந்தியா உட்பட உலக  நாடுகளில் சர்வதேச விமான நிலையங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டு  இருக்கிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா போன்ற  நாடுகளில் விமான நிலையத்திலேயே சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய  விமானங்களில் இருந்து வருபவர்கள் இந்த வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார்களா?  என்ற சோதனை செய்தபிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்நிலையில், இந்தியாவில் இருந்து சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற செவிலியர்கள் 30 பேரிடம் மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. கேரளத்தில் இருந்து சென்ற செவிலியர் ஒருவருக்கு கரோனா வைரஸ் இருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து 30 செவிலியரையும் தனி அறைகளில் தங்க வைத்து அந்நாட்டு அரசு மருத்துவர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் ரத்து:

ஜப்பானில் நடப்பாண்டு ஜூலை 24-ம் தேதி முதல் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால், வூகான் பகுதியில் கரோனா  வைரஸ் பரவி வருவதால் அங்கு நடக்கவிருந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்று பெண்கள் கால்பந்து போட்டிகள் நான்ஜிங் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதேபோல் குத்துச் சண்டை போட்டியை ரத்து செய்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி  உத்தரவிட்டுள்ளது.

Related Stories: