தண்ணீர் பக்கெட்டிற்குள் விழுந்த குழந்தை சாவு: திருப்பூரில் பரிதாபம்

திருப்பூர்: திருப்பூரில் தண்ணீர் பக்கெட்டிற்குள் விழுந்த குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது. திருப்பூர் அங்கேரிபாளையத்தை அடுத்த அவினாசிகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (33). பனியன் தொழிலாளி. இவரது மனைவி பாண்டியம்மாள்(22). இவர்களுக்கு ஒரு வயதில் கனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நேற்று காலை கண்ணன் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார். இதையடுத்து பாண்டியம்மாள் வீட்டிற்குள் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை கனிஷ்கா வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தது.

பின்னர், பாண்டியம்மாள் வெளியே வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியும் காணவில்லை. சோகத்துடன் வீடு திரும்பிய பாண்டியம்மாள், வீட்டின் முன்புறம் தண்ணீர் பிடித்து வைத்திருந்த வாளிக்குள் குழந்தை கனிஷ்கா மூழ்கி கிடந்ததை பார்த்து அலறினார். பின்னர் குழந்தையை தூக்கி கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

வாளி தண்ணீரில் மூழ்கிய குழந்தை மூச்சு திணறி இறந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tirupur , Water buckets, baby, death, Tirupur
× RELATED நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்கலாம்?!