எருதுவிடும் விழாவில் பரிசு வெல்ல காளைகளுக்கு ஊக்க மருந்து ஊசி?... பரபரப்பு குற்றச்சாட்டு

திருப்பத்தூர்: பொங்கல் பண்டிகையை தொடர்ந்து  வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு எனப்படும் எருது விடும் விழா நடைபெறுகிறது. இதற்கு கலெக்டர் மற்றும் போலீசாரிடம் அனுமதி பெற வேண்டும். இதில் குறிப்பிட்ட தூரத்தை விரைவாக ஓடும் காளைகளுக்கு லட்சங்கள் வரை பரிசு வழங்கப்படுகிறது. இதற்காக காளைகளை தேர்வு செய்து வேகமாக ஓட அவற்றுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் ஏரி, குளங்களில் நீச்சல் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

இதில் சிலர் காளைகள் விரைவாக ஓடி பரிசு வெல்ல வேண்டும் என்பதற்காக போதை பொருட்களை வழங்குவதாகவும் மேலும் பல்வேறு வகையில் துன்புறுத்துவதாகவும் புகார்கள் எழுந்தது. இதனால் அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி அனைத்து காளைகளுக்கும் இன்சூரன்ஸ் செய்ய வேண்டும். விழாவில் கலந்துகொள்ளும் காளைகளை கால்நடை மருத்துவர்கள் மருத்துவ சோதனை செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது 8 இடங்களில் எருது விடும் விழா நடந்துள்ளது.

இந்நிலையில் சிலர் தங்கள் காளைகள் பரிசு வெல்ல வேண்டும் என்பதற்காக ஆந்திராவிலிருந்து ரூ2 ஆயிரம் மதிப்புள்ள ஊக்கமருந்து ஊசியை வாங்கி வந்து காளைகளுக்கு போடுவதாகவும், இந்த ஊக்க மருந்து ஊசி விற்கப்படும் இடத்தை, காளைகளை பரிசோதிக்கும் சில கால்நடை மருத்துவர்களே தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஊக்க மருந்து ஊசி செலுத்தப்பட்ட காளைகள் போதையில் தலைதெறிக்க ஓடி அருகே உள்ள கிணற்றில் விழவும், வாகனங்களில் மோதி காயமடைந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் நேற்று வாணியம்பாடி அடுத்த நிம்மியம்பட்டு பகுதியில் நடந்த எருதுவிடும் விழாவில் ஒரு காளை கிணற்றில் விழுந்து இறந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட கால்நடை உதவி இயக்குனர் நாசர் கூறுகையில், நாங்கள் காளைகளுக்கு சாராயம் மற்றும் மது உள்ளிட்டவைகளை ஊற்றுகிறார்களா என பரிசோதனை மேற்கொள்கிறோம். இதுபோல ஸ்டீராய்ட் எனப்படும் ஊக்க மருந்துகளை செலுத்தப்படுவது பரிசோதனையில் தெரியவராது. ஆகையால் இறந்த காளையை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து, அதன் அறிக்கையில் ஏதாவது தெரியவந்தால் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். மேலும் இவ்வாறு ஊக்க மருந்து செலுத்துவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Bulling ceremony, bull, stimulant injection
× RELATED ரேக்ளா ரேஸ் காளைகளுக்கு பயிற்சி