நேதாஜி சுபாஷ் சிலையின் கையில் பாஜக கொடி: எந்த கட்சியும் அவரை சொந்தமாக்க முடியாது...பேரன் சந்திரபோஸ் பேட்டி

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலையின் கையில் பாஜக கட்சி கொடியை கொடுத்ததற்கு நேதாஜியின் பேரன் சந்திரபோஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நேதாஜி என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்  இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது  இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸூன் 123-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி 23) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கட்சி தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை மற்றும் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதற்கிடையே, மேற்குவங்கம் மாநில பாரதிய  ஜனதா கட்சி நிர்வாகிகள் மாநிலத்திலிருந்த நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது, சுபாஷ் சந்திர போஸ் சிலையின் கையில் பாஜக கொடியை கட்டி விட்டனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக  வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையானது.

இது சம்பவத்திற்கு மேற்குவங்க பாஜக துணை தலைவரும், நேதாஜியின் பேரனுமான சந்திரபோஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், சந்திரபோஸ் கூறுகையில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அரசியல் நபராக இருந்தாலும் கட்சி  அரசியலுக்கு அப்பாற்பட்டவர். எந்த கட்சியும் அவரது கையில் கொடியை கொடுத்து நேதாஜியை சொந்தமாக்க முடியாது. முறையற்ற இந்த நிகழ்வை நான் கண்டிக்கிறேன். இது குறித்து பாஜ., மாநில தலைவரான திலிப் கோஷ் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் சில சிறிய மாற்றங்களுடன் குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரிக்கிறேன்.

அண்டை நாடுகளில் துன்புறுத்தப்பட்ட மக்களுக்கு நாம் அடைக்கலம் கொடுக்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறியிருக்கிறார். ஆனால் அவர் எந்த மதத்தையும் குறிப்பிடாமல், துன்புறுத்தப்பட்ட அனைவரையும் குறிப்பிட்டுள்ளார். எனவே  காந்தி கூறியதை பின்பற்ற வேண்டும் என்றால், அவர் சொன்ன அனைத்தையும் பின்பற்ற வேண்டும் என்றார். மதத்தை குறிப்பிடாமல் துன்புறுத்தப்பட்ட நபர்கள் இந்தியாவில் குடியுரிமை பெறப்படுவார்கள் என இந்திய அரசு, சிஏஏ.,வை  சரிசெய்து மாற்றியமைத்தால், அனைத்து எதிர்கட்சிகளின் பிரசாரமும் சில நொடிகளில் காணாமல் போய்விடும் என்றார்.

நான் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த போது, கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் கலந்துரையாடினேன். அப்போது, அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும்  மதசார்பற்ற நேதாஜியின் சித்தாந்தத்தின் அடிப்படையில் தான் அரசியல் செய்வேன், நான் நேதாஜியின் திசைகளிலிருந்து விலக மாட்டேன், என்றேன். இது போன்ற நிலை இருந்தால், நான் பாஜ.,வில் என்னுடைய எதிர்காலம் குறித்து  மறுபரிசீலனை செய்வேன் என்றும் கூறியுள்ளார்.


Tags : party ,BJP ,Netaji Subhas , BJP flag at the hands of Netaji Subhas statue: No party can own him: Interview with grandson Chandra Bose
× RELATED கிருஷ்ணகிரி துவாரகாபுரியில் அண்ணா சிலை திறப்பு, திமுக கொடியேற்று விழா