ரோஹிங்கியா மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டும்: மியான்மர் அரசுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

ஹேக்: ரோஹிங்கியா மக்கள் இனப்படுகொலை செய்யப்படுவதை தடுக்குமாறு மியான்மருக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு மியான்மரின் ரகைன் மாநிலத்தில் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலால் 7,30,000-க்கும் மேற்பட்ட ரோஹிங்யா முஸ்லிம்கள் மற்ற நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்தனர். அதில் பெரும்பகுதி மக்கள் வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கான நோக்கம் இனப்படுகொலை என்று ஐக்கிய நாடுகள் சபை விசாரணை செய்து தெரிவித்தது. இந்த நிலையில், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு நீதி கேட்டு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தென் ஆப்பிரிக்க நாடான கேம்பியா, நெதர்லாந்து நாட்டின் ஹேக் என்ற இடத்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 57 இஸ்லாமியக் கூட்டுறவு நாடுகளின் சார்பில் கேம்பியா இந்த வழக்கைப் பதிவு செய்தது. அதில் மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகவும், மியான்மர் 1948ம் ஆண்டு போடப்பட்ட ஐ.நா. இனப்படுகொலை தடுப்பு உடன்படிக்கையை மீறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியது. கேம்பியாவின் கோரிக்கையை ஏற்று மியான்மர் கமிஷன் என்ற விசாரணைக் குழுவை சர்வதேச நீதிமன்றம் நியமித்தது. இந்தக் குழுவின் விசாரணை முடிவில், மியான்மர் ராணுவத்தின் சில வீரர்கள் போர்க் குற்றத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் எனவும் முழுமையாக மியான்மர் ராணுவமே அவ்வாறு நடந்துகொள்ளவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கானது 17 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரோஹிங்கியா இனத்தினர் படுகொலை செய்யப்படுவதை மியான்மர் அரசு தடுக்க வேண்டும் என 17 நீதிபதிகளும் ஒருமனதாக தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், ரோஹிங்கியா மக்கள் கடுமையான ஆபத்தில் இருந்தனர் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தலைமை நீதிபதி அப்துல்காவி அகமது யூசுப், சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை மியான்மர் அரசு எவ்வாறு செயல்படுத்துகிறது என்பது குறித்து நான்கு மாதங்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: