நிர்பயா வழக்கு குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும்: பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் கருத்துக்கு நடிகை கங்கனா ரனாவத் கண்டனம்

டெல்லி: டெல்லியில் மருத்துவ மாணவி கற்பழித்து கொடூர முறையில் கொலை செய்யப்பட்ட நிர்பயா வழக்கில் முகேஷ் குமார் சிங்(32), பவன் குப்தா(25), வினய் சர்மா(26), அக்ஷய் குமார் சிங்(31) ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் இம்மாதம் 22ம் தேதி அன்று தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் செய்து வந்தது. இந்த நிலையில், குற்றவாளிகளின் ஒருவனான முகேஷ் சிங், தூக்கு தண்டனையில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார்.

குடியரசுத்தலைவர் கருணை மனுவை நிராகரித்தார். கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னர், அது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பி, நோட்டீஸ் அனுப்பிய நாளில் இருந்து 14 நாட்களுக்கு பின்னர்தான் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற விதி இருப்பதால், முகேஷ் சிங்கிற்கு கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. 14 நாட்களை கணக்கில் வைத்து பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட வேண்டும் திகார் சிறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, நிர்பயா வழக்கு குற்றவாளிகளை மன்னிக்க வேண்டும் என்று மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பங்கா திரைப்பட பிரமோசன் நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் மீது இந்திரா ஜெய்சிங்கால் எப்படி இரக்கம் காட்ட முடிகிறது என கேள்வியெழுப்பினார். நிர்பயா குற்றவாளிகள் அடைபட்டிருக்கும் சிறை அறையில் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கை 4 நாள்கள் அடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இந்திரா ஜெய்சிங் போன்ற பெண்கள்தான், பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலைகளில் ஈடுபடும் ராட்சதர்களை பெற்றெடுக்கிறார்கள் எனவும் கங்கனா விமர்சித்தார். நிர்பயா வழக்கு குற்றவாளிகளை பொது இடத்தில் தூக்கிலிட்டு, முன்னூதாரணத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் கங்கனா வலியுறுத்தினார்.

Related Stories: