சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவிற்கான 3 நாள் ஒத்திகை நிகழ்ச்சி நிறைவு

சென்னை: குடியரசு தினவிழாவை முன்னிட்டு சென்னையில் இறுதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் 71வது குடியரசு தினவிழா வருகின்ற 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் 3 நாட்களாக நடைபெற்று வந்த ஒத்திகை நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு பெற்றது. தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவது போன்ற ஒத்திகையின் போது மரியாதை செலுத்தும் வகையில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் அணிவகுத்துச் சென்றன. இதனை தொடர்ந்து, காவல்துறை, கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப்படை, உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  காலையில் 7.30 மணியிலிருந்து 10 மணி வரை நடைபெற்ற ஒத்திகையின் போது முப்படையினரின் கண்கவர் அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழக காவல்துறை, காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் மற்றும் தீயணைப்பு துறையினரும் அணிவகுப்பில் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பிற மாநிலத்தவரின் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. தமிழக முதலமைச்சர் மற்றும் ஆளுநரின் மாதிரி கான்வாய் வாகனங்கள் கொண்டு வரப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டது. இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒத்திகை நிகழ்ச்சிக்காக காலை 7.30 மணியிலிருந்து 10 மணி வரை மெரினா கடற்கரை சாலையுடன் இணையும் சாலைகள் வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை தலைவர், மாநகர ஆணையர், தமிழக முதன்மை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: