தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரத்து: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1, 706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் 9 வகுப்புகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், 6 முதல் 8 வரையிலான வகுப்புகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், தொடக்க நிலையிலுள்ள 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பணியிடம் உருவாக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

ஆனால், தமிழகம் முழுவதுமுள்ள பல அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதனால், குறைவான மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளில், மாணவர் ஆசிரியர் விகிதாசாரத்திற்கு தொடர்பில்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவதும் பள்ளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாமல் உபரியாக உள்ள காலிப் பணியிடங்களின் விவரங்களை அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

அதன்படி ஆசிரியர் இல்லாமல் உபரியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையை தற்போது வெளியிட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை,  மொத்தமாக 1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஆசிரியரின்றி உபரியாக இருப்பதால் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த பணியிடங்கள் பொதுத்தொகுப்புக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவற்றை காலிப்பணியிடங்களாக கருத முடியாது. மேலும் புதிதாக ஆசிரியர்களையும் நியமிக்க முடியாது எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Related Stories: