×

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார் பணியிடமாற்றம்

டெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012ல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில் வினய் சர்மா, அக்‌ஷய் குமார் சிங், முகேஷ் குமார் சிங் மற்றும் பவன் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தபடி, 4 குற்றவாளிக்கு  நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், குற்றவாளிகளில் ஒருவனான முகேஷ் சிங்கின் கருணை மனு நிலுவையில் இருப்பதால் தண்டனை நிறைவேற்றுவதை டெல்லி மாநில அரசு ஒத்திவைத்தது.

அந்த மனுவை ஜனாதிபதி நிராகரித்த நிலையில், தற்போது பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மற்ற 3 கைதிகள் இன்னும் கருணை மனு தாக்கல் செய்யவில்லை. அதோடு, வினய், அக்‌ஷய் இருவரும் மறுசீராய்வு மனுவை இன்னும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இந்த வாய்ப்புகள் எல்லாம் இருப்பதால் அவர்களால் தொடர்ந்து தண்டனையை தள்ளிப் போட முடியும். இது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், ‘சீராய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதும், தூக்கு தண்டனை கைதிகள் கருணை மனு தாக்கல் செய்ய குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். அதேபோல், தூக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்டதில் இருந்து 7 நாளில் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்ய வேண்டும். கருணை மனு நிராகரிக்கப்பட்ட 7 நாளில் தூக்கு தண்டனை வாரன்ட் பிறப்பித்து, அடுத்த 7 நாளில் தண்டனையை நிறைவேற்ற வேண்டுமென நாட்டின் அனைத்து நீதிமன்றங்கள், மாநில அரசுகள், சிறை நிர்வாகங்களுக்கு உத்தரவிட வேண்டும். சக குற்றவாளிகளின் கருணை, மறுசீராய்வு மனுக்காக காத்திராமல், நிர்ணயிக்கப்பட்ட தேதியில் மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்ட நீதிபதி சதீஷ்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் கூடுதல் அமர்வு நீதிபதியாக இருந்த நீதிபதி சதீஷ்குமார் அரோரா உச்சநீதிமன்றத்தில் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags : Nirbaya ,Satish Kumar ,case convicts ,Judge ,Who , Nirbhaya case, Justice Satish Kumar, transfer of work
× RELATED அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு..!!