வலிமையான நாடாக இருந்த இந்தியா தற்போது ஃபாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

சென்னை: வலிமையான நாடாக இருந்த இந்தியா தற்போது ஃபாசிச நாடாக மாற்றப்பட்டு வருவதாக கனிமொழி எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் நடைமுறை மற்றும் பன்முகத்தன்மை, அரசின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு, அரசியல் கலாசாரம் மற்றும் குடிமக்கள் உரிமைகள் ஆகிய 5 அம்சங்களின் அடிப்படையில் சர்வதேச ஜனநாயக தரக் குறியீடு பட்டியல் தயாரிக்கப்படுகிறது. உலக நாடுகளில் ஜனநாயகத்தின் நிலை குறித்து ஆண்டுதோறும் தி எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட், தரக்குறியீட்டை வெளியிட்டு வருகிறது. அதில் கடந்த ஆண்டு 41வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த முறை 10 இடங்கள் பின்தங்கி 51வது இடத்தில் இருக்கிறது.

குடிமக்கள் உரிமையில் ஏற்பட்ட சறுக்கலே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலிடத்தில் நார்வேயும், இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் முறையே ஐஸ்லாந்து மற்றும் சுவீடன் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், இதுகுறித்து தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உலக ஜனநாயக குறியீட்டில், இந்தியா ஒரே ஆண்டில் 10 இடங்கள் கீழிறங்கியிருப்பது, இந்தியாவில் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை உணர்த்துகிறது. ஒரு வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

Related Stories: