திருடனை பிடித்து கொடுத்தும் வழக்குப்பதியாத போலீசாரை கண்டித்து கிராம மக்கள் மறியல்: மேட்டுப்பாளையம் அருகே பரபரப்பு

மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெல்லாதி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக வீடுகளை குறி வைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகின்றனர். இது குறித்து காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவில் இதே கிராமத்திற்கு ஜீப் ஒன்றில் வந்த 4 பேர் கும்பல் வணிக நிறுவனத்தின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வந்து அவர்களை விரட்டினர். அப்போது கொள்ளையர்களில் 3 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவன் மட்டும் சிக்கினார்.

கொள்ளையர்கள் வந்த ஜீப்பை அடித்து நொறுக்கிய பொதுமக்கள், பிடிபட்ட திருடனை காரமடை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் தங்கள் கிராமத்தில் தொடர் திருட்டு நடைபெறுவது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என போலீசாரிடம் பொதுமக்கள் கேட்டுள்ளனர். அதற்கு போலீசார் முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.  மேலும் பொதுமக்கள் பிடித்து கொடுத்த திருடனிடம் போலீசார் முறைப்படி விசாரணைகூட நடத்தவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் நால்ரோடு என்ற இடத்தில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பொதுமக்களால் பிடித்து கொடுத்த திருடன் மீது உடனடியாக வழக்குப் பதியப்படும் என்றும், தப்பியோடிய கொள்ளையர்களை பிடிக்க  நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: