வட மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு துவரை, உளுத்தம் பருப்பு வரத்து அதிகரிப்பு துவரை, உளுத்தம் பருப்பு வரத்து அதிகரிப்பு: கடந்த ஆண்டை விட விலையும் உயர்ந்தது

சேலம்: வட மாநிலங்களிலிருந்து சேலம் லீபஜாருக்கு  துவரை, உளுத்தம் பருப்பு வரத்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மளிகை வியாபாரிகள் தெரிவித்தனர்.  ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்தில் தமிழகம் மற்றும் வட மாநிலங்களில் தானிய அறுவடை நடப்பது வழக்கம். இந்த தானிய வகைகளை விவசாயிகள் சுத்தம் செய்து இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், சேலம் லீ பஜாருக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தவிர வட மாநிலங்களில் இருந்தும் தானிய வகைகளின் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

தினசரி ஐந்துக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் துவரை, உளுந்து, பச்சைபயிறு, கொள்ளு, அவரைக்கொட்டை, கொண்டைக்கடலை, பொட்டுக்கடலை, கடலைப்பருப்பு, புளி, கொத்தமல்லி, மிளகாய், மிளகு, சீரகம், வெந்தயம், பட்டை, லவங்கம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு உள்ளிட்டவைகள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன. இங்கு விற்பனைக்கு வரும் தானிய வகைகள் சிறு வியாபாரிகள் வாங்கிச்செல்வதால் வியாபாரம் சுறுசுறுப்படைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சேலம் லீ பஜார் மளிகை மொத்த வியாபாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகை முடிந்ததால் சேலம் லீ பஜாருக்கு கடந்த இரு நாட்களாக புது மளிகைப்பொருட்கள் வருவது சற்று அதிகரித்துள்ளது. கடந்தாண்டு வட மாநிலங்களில் பெய்த கன மழையால் அங்கு துவரை, உளுந்து, பச்சைப்பயறு உள்ளிட்டவைகளின் விளைச்சல் பாதித்துள்ளது. அதனால் நடப்பாண்டு எதிர்பார்த்த அளவுக்கு தானியம் மற்றும் மளிகைப்பொருட்களின் வரத்து இல்லை. தற்போது வட மாநிலங்களில் இருந்து உளுந்து, பச்சைப்பயறு, துவரை உள்ளிட்டவைகளின் வரத்து 20 முதல் 30 சதவீதமாக இருக்கிறது. 20 நாட்கள் கழித்து கொள்ளு, தட்டைப்பயிர், கொண்டைக்கடலை, அவரைக் கொட்டை உள்பட பல உணவுப்பொருட்கள் விற்பனைக்கு வரும். இன்னும் ஒரு மாதத்தில் இதன் வரத்து 60 முதல் 70 சதவீதமாக இருக்கும். கடந்தாண்டு விற்ற விலையை விட நடப்பாண்டு உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு உடைக்கப்படாத உளுந்து மூட்டை ₹7000த்திலிருந்து ₹7500க்கு விற்றது. நடப்பாண்டு மூட்டைக்கு ₹500 அதிகரித்து ₹7500 லிருந்து ₹8000 எனவும், ₹8000 விற்ற பச்சைப்பயறு ₹1000 அதிகரித்து ₹9000 எனவும், ₹6500 விற்ற துவரை ₹7000 எனவும் விலை அதிகரித்துள்ளது.

சில்லரையில் கடந்தாண்டு துவரம்பருப்பு கிலோ ₹65 முதல் ₹70க்கு விற்றது. நடப்பாண்டு ₹75 எனவும், ₹80க்கு விற்ற உளுத்தம்பருப்பு ₹105 எனவும், ₹90க்கு விற்ற பச்சைப்பயறு ₹105 எனவும் விலை அதிகரித்துள்ளது. இவைகளை தவிர தமிழகத்தில் உற்பத்தியாகும் சிறு தானிய வகைகளான கம்பு, கேழ்வரகு, ராகி, திணை, வரகு உள்ளிட்டவைகளின் வரத்து கடந்தாண்டை போலவே நடப்பாண்டும் உள்ளது. அதனால் கடந்த ஜனவரியில் என்ன விலை விற்றதோ, அதே விலையில் தான் தற்போதும்   விற்கப்படுகிறது. இங்கு விற்பனைக்கு வரும் தானிய வகைகள், பருப்பு வகைகள், மசாலாப் பொருட்களை சிறு வியாபாரிகள் வாங்கிச்சென்று சில்லரையில் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

Related Stories: