ஆங்கிலேயரை அலற வைத்த ‘ஒன் மேன் ஆர்மி’

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இந்த பெயரை உச்சரிக்கும்போதே ஒவ்வொரு இந்தியரின் உணர்வும் வீரத்துடன் துடிக்கும். அப்படி ஒரு மாவீரனாக, ஆங்கிலேயரை துணிவோடு எதிர்த்த ஒன்மேன் ஆர்மியாக விளங்கியவர். இந்திய தேசிய ராணுவத்தை கட்டமைத்தவர். இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இன்று அவருக்கு பிறந்தநாள். அவரைப்பற்றி தெரிந்து கொள்வோமா?

சுபாஷ் சந்திர போஸ் 1897, ஜன.23ம் தேதி வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இளம்வயதிலேயே நாட்டுப்பற்று, துணிச்சல் மிக்கவராக திகழ்ந்தார். இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலமது. இரண்டாம் உலகப்போர் நடைபெற்றபோது வெளிநாடுகளில் போர்க்கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டினார். இவர்களைக் கொண்டு, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி மிரளச் செய்தார்.

வீரத்தில் மட்டுமல்ல... படிப்பிலும் இவர் சிறந்து விளங்கினார். இந்திய சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான ஐ.சி.எஸ் தேர்வில், இந்திய அளவிலேயே நான்காம் இடம்பெற்று தேர்ச்சியடைந்தவர் நேதாஜி. இவருக்கு மிகப்பெரிய பதவி தரப்பட்டது. ஆனால், ஆங்கிலேயருக்கு அடிபணிய அவருக்கு விருப்பமில்லை. இதனையடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார். னைவருக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது. அதற்கு அவர், ‘‘என் தாய், தந்தையரை விட தாய்நாடு முக்கியம்’’ என வீரவேட்கையை, இந்திய இளைஞர்களின் மனதில் உருவாக்கினார்.1924ம் ஆண்டு பர்மாவின் மாண்டலே சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் நேதாஜி. அந்த சிறையிலேயே அவரை முடக்க எண்ணியது ஆங்கிலய அரசு. ஆனால் அப்போது நடந்த வங்க சட்டமன்றத் தேர்தலில் சிறையிலிருந்தவாரே வெற்றி பெற்றார் போஸ்.

இதனால் இவர் மீது ஆங்கிலேய அரசு கடும் கோபமடைந்தது.மாண்டலே சிறையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட போஸை விடுவிக்க சொல்லி போராட்டம் நடந்தது. அவரை 2 நிபந்தனைகளோடு விடுதலை செய்ய சம்மதித்தது பிரிட்டிஷ் அரசு. 1. சுபாஷ் மன்னிப்பு கோர வேண்டும். 2. மூன்று ஆண்டுகள் இந்தியாவில் இருக்கக்கூடாது என்றது. ஆனால், பிடிவாதமாக மறுத்து விட்டார் நேதாஜி.ஒருமுறை வீட்டுச்சிறையில் தீவிர கண்காணிப்பில் இருந்த நேதாஜி, ஆங்கிலேயரின் கண்களில் மண்ணைத் தூவி தரை வழியாகவே பயணம் செய்து ஆப்கனையும், பின்னர் அங்கிருந்து பெருமுயற்சி எடுத்து ஜெர்மனியையும் அடைந்தார். சுபாஷைக் காணவில்லை என நாடே கதிகலங்கி நின்றது. அப்போது, ஜெர்மனியிலிருந்து சுபாஷ் உரை நிகழ்த்தினார். இந்த வீரப்போராளியை கண்டு உலகமே வியந்தது.

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தபோது, இந்திய சுதந்திரப் போருக்கு புது ரத்தம் பாய்ச்சியவர் சுபாஷ் சந்திர போஸ். ஒவ்வொரு இளைஞனையும் தனது சீறிய பேச்சால் சுதந்திரப் போரில் பங்குபெறச் செய்தார். “ரத்தம் கொடுங்கள். நான் சுதந்திரம் தருகிறேன்” என்ற சுபாஷின் பேச்சு ஒவ்வொரு இளைஞனையும் தட்டி எழுப்பியது. இந்திய தேசிய ராணுவத்தில் சுபாஷின் ரத்தம் பாய்ச்சப்பட, அது ஆங்கிலேயரின் இந்தியப் படையிலும் பாய்ந்தது. இனி இந்திய ராணுவத்தை நம்ப முடியாது என்பதால்தான், பிரிட்டிஷ் அரசு இந்தியாவை விட்டு வெளியேறியது என்று சில வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஒருமுறை ஜப்பான் சென்று இந்திய சுதந்திரப் போருக்கு ஆயத்தமாக விரும்பிய சுபாஷ், ஜெர்மனியிலிருந்து நீர்மூழ்கிக் கப்பல் வழியாக சுமார் மூன்று மாதம் பயணம் செய்து டோக்கியோவை அடைந்தார்.

நாட்டுக்காக இவர் ஆற்றிய வீரச்சேவையை பாராட்டி, 1992ம் ஆண்டு இறந்தவர்களுக்குத் தரப்படும் ‘பாரத ரத்னா விருது நேதாஜிக்கு அறிவிக்கப்பட்டது. அவர் இறக்கவில்லை என்று கூறி பலரும் விருதுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். போஸின் குடும்பமும் அவ்விருதை ஏற்க மறுத்தது. இதனால் விருது திருப்பி அனுப்பப்பட்டது. தனது ஒவ்வொரு முயற்சியிலும் ஆங்கிலேயரை அலற வைத்த, ‘ஒன்மேன் ஆர்மி’ போல நேதாஜி திகழ்ந்தார் என்பது மிகையல்ல...!

Related Stories: