×

எந்த வீரரை எந்த இடத்தில் இறக்குவது என்பதில் சரியான தெளிவு தோனியிடம் இருந்தது: முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் வெளிப்படை!

புதுடெல்லி: எந்த வீரரை எந்த இடத்தில் இறக்குவது என்பதில் சரியான தெளிவு தோனியிடம் இருந்தது, என்று முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக் வெளிப்படையாக தமது கருத்தை பதிவு செய்துள்ளார். கேப்டன் விராட் கோலி-தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அடங்கிய தற்போதைய இந்திய அணி நிர்வாகம், இளம் வீரர்களுக்கு அவர்களது திறமையை நிரூபிக்க ஏதுவாக தொடர் வாய்ப்புகள் வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டும் விமர்சனமும் உள்ளது. உலக கோப்பைக்கு முன், நான்காம் வரிசை பேட்ஸ்மேனை தேடும் படலத்தில், ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே ஆகியோருக்கு தொடர் வாய்ப்புகள் வழங்கவில்லை.

இந்திய அணியின் நான்காம் வரிசை வீரராக உலக கோப்பைக்கு பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், செம ஃபார்மில் சிறப்பாக ஆடிவரும் ராகுலை நீக்கமுடியாது என்பதால், அந்த தொடரில் வெவ்வேறு பேட்டிங் ஆர்டரில் இறக்கப்பட்டார் ராகுல். அணி நிர்வாகம், எந்த பேட்டிங் ஆர்டரில் ஆடவைத்தாலும், அந்த வரிசையில் இறங்கி, தன் மீது அணி நிர்வாகம் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நியாயம் செய்கிறார் ராகுல். ஆனால் எந்த வரிசையிலும் ஆடும் திறன் வாய்ந்த ராகுலின் இடமே இந்திய அணியில் சந்தேகமானதுதான் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், தோனியின் தலைமையில் எல்லா வீரர்களுக்கும் உரிய வாய்ப்பு வழங்கப்பட்டதாகவும், எந்தவீரரை எந்த இடத்தில் இறக்குவது என்பதில் சரியான தெளிவு இருந்ததாகவும் மிகவும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். மேலும் பேசிய இவர், ஒருவேளை கே.எல்.ராகுல் 5வது இடத்தில் நான்கு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால், மீண்டும் அவரது இடத்தினை மாற்றுவார்களா?. இதுபோன்ற நிலை தோனி கேப்டன்ஷிப்பில் இருந்ததில்லை. கடினமான நேரங்களில் வீரர்களுக்கு பக்கபலமாக இருப்பதன் முக்கியத்துவத்தை தோனி நன்கறிந்தவர்.

ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரையில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வது எளிது. ஆனால் மிடில் ஆர்டரில் உள்ள பேட்ஸ்மேன்களுக்கு கேப்டனின் பக்கபலம் தேவை. வீரர்களுக்கு உரிய வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால், எப்படி அவர்கள் தவறுகளை சரிசெய்து கொண்டு பெரிய வீரர்களாக மாறுவார்கள்?. ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவதற்கு முன்பு மிடில் ஆர்டரில் களமிறங்கிய போது, நான் நிறைய தவறுகள் செய்தேன். இது அணியின் தோல்விகளுக்குக் கூட காரணமாக அமைந்தது. வீரர்களுக்கு நேரம் தேவை. தற்போதைய நிலையில், ராகுல் கீப்பராக தொடர இந்திய அணி நிர்வாகம் அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும். பெஞ்சில் உட்கார்ந்தால் எப்படி பெரிய வீரராக மாற முடியும் என சேவாக் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Tags : Virender Sehwag ,player ,MS Dhoni , Virender Sehwag, Dhoni, Virat Kohli, Indian cricket team
× RELATED தோனியை விட சிஎஸ்கேக்கு இந்த ஆண்டு...