கும்பகோணத்தில் மத்திய அரசால் வழங்கிய 21 நகராட்சி புதிய குப்பை அள்ளும் ஆட்டோக்கள் பழுது:காட்சிப்பொருளான அவலம்

கும்பகோணம்: கும்பகோணம் நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு மத்திய அரசு வழங்கிய 21 பேட்டரி ஆட்டோக்கள் பழுதடைந்து காட்சி பொருளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.கும்பகோணம் நகரில் உள்ள 45 வார்டுகளில் வசிக்கும் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இருந்து நாளொன்றுக்கு 70 டன் குப்பைகள் சேகரமாகிறது. இதில் 25 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகளாக மலைபோல தேங்குகிறது. இவற்றை வார்டுகள் தோறும் சேகரிக்க ஆங்காங்கே முக்கிய இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் தனியார் நிறுவன நிர்வாகத்தின் லாரிகள் மூலம் கரிக்குளத்தில் உள்ள குப்பை சேகரிக்கும் மையத்தில் பிரித்து சுழற்சி பணிகளுக்காக அனுப்பி வந்தனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குப்பையில்லா நகரமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தெருக்கள் தோறும் இருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டன. பின்னர் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. இவற்றை நகரத்தில் 9 இடங்களில் வைத்து தரம் பிரித்து சுழற்சி பணிகளுக்கு அனுப்பப்படுகிறது. மேலும் மக்கும் குப்பைகளை அரைத்து நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கிட்டங்கிகளும் செயல்படுகிறது.

Advertising
Advertising

இதற்கிடையில் பேட்டரியால் இயங்கும் 59 சிறிய ரக குப்பை அள்ளும் ஆட்டோக்களை ஓராண்டுக்கு முன் மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் வழங்கியது. ஆனால் இவற்றை நகராட்சி நிர்வாகம் பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தது.நகராட்சியின் மாட்டு கொட்டகையாக இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள பகுதியில் இப்போது பேட்டரி ஆட்டோக்களும், பழைய குப்பை தொட்டிகளும், பணியாளர்கள் சேகரிக்க பயன்படுத்தும் சிறிய ரக தொட்டிகள் காட்சி பொருளாக காணப்பட்டது. இதனால் பெருமளவு பேட்டரி ஆட்டோக்கள் பழுதானது.இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் 38 பேட்டரி வண்டிகள் பயன்பாட்டுக்கு வந்தது. மீதமுள்ள 21 வண்டிகளின் பேட்டரிகள் இயங்காமல் பாணாதுறை பம்பிங் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள், குப்பை அள்ள வண்டிகள் இல்லாததால் மீண்டும் பழுதாகி நிற்கும் மூன்று சக்கர சைக்கிளில் சேகரித்து வருகின்றனர். இதனால் தெரு முழுவதும் குப்பைகள் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து நகராட்சி உதவி பொறியாளர் சண்முகவடிவிடம் கேட்டபோது,பல நாட்களாக நிறுத்தி வைத்திருந்ததால் வாகனத்தில் உள்ள பேட்டரி பழுதாகி விட்டது. அதை சரி செய்து வருகிறோம். அனைத்து ஆட்டோக்களும் விரைவில் சரி செய்யப்படும் என்றார்.

Related Stories: