பெரியாறு அணையில் மதகுகள் இயக்கம் சீராக இருக்கிறது: ஆய்வுக்குப் பின் துணைக்குழுவினர் திருப்தி

கூடலூர்:பெரியாறு அணையில் மதகுகள் இயக்கம் சீராக உள்ளதாக துணை கண்காணிப்பு குழுவினர் தெரிவித்தனர். பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க உச்சநீதிமன்றம் நியமித்த மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவிற்கு உதவியாக துணை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக தற்போது கொச்சியிலுள்ள மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழக பிரதிநிகளாக பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி செயற்பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகளாக கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ஜோஸ் சக்கரியா, உதவி பொறியாளர் பிரசீத் ஆகியோர் உள்ளனர்.

 கடந்த டிச. 9ல் அணையின் நீர்மட்டம் 128.05 அடியாக இருந்தபோது துணைக்குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். வரும் 28ம் தேதி கண்காணிப்பு குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்ய உள்ளதை முன்னிட்டும், தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக குறைந்துள்ள நிலையில் அணைப்பகுதியில் செய்யப்பட வேண்டிய மராமத்து பணிகள் குறித்தும் துணைக்கண்காணிப்பு குழுவினர் நேற்று பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர்.

மெயின் அணை, பேபி அணை, கேலரிப்பகுதி, மதகுப்பகுதி மற்றும் அணையின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், சீப்பேஜ் வாட்டர் (கசிவுநீர்) குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக குழு தலைவர் சரவணக்குமார், தமிழக அதிகாரிகளுடன் தேக்கடி படகுத்துறையிலிருந்து தமிழக பொதுப்பணித்துறை படகில் அணைக்கு புறப்பட்டு சென்றனர். கேரள அதிகாரிகள் அம்மாநில வனத்துறையின் படகில் அணைக்கு சென்றனர். இதைத் தொடர்ந்து நேற்று மாலை குமுளியிலுள்ள கண்காணிப்பு குழு அலுவலகத்தில் துணைக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு பின் அதிகாரிகள் கூறுகையில், ‘‘பெரியாறு அணையின் நீர்மட்டம் 119.40 அடியாக குறைந்துள்ள நிலையில் அணைப்பகுதியில் செய்யப்பட வேண்டிய மராமத்து பணிகள் குறித்தும், வரும் 28ம் தேதி கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்ய வருவதற்கு முன்னேற்பாடாகவும் ஆய்வு செய்யப்பட்டது. அணையின் சீப்பேஜ் வாட்டர் (கசிவு நீர்) நிமிடத்திற்கு 41 லிட்டர் அளவில் உள்ளது. இது அணையின் நீர்மட்ட அளவான 119.40க்கு மிக துல்லியமான அளவாக உள்ளது. அணையில் 1, 8, 9வது மதகுகளை இயக்கி பார்த்ததில் அதன் இயக்கம் சீராக உள்ளது. துணைக்குழுவின் ஆலோசனைக்கூட்ட முடிவு கண்காணிப்பு குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது’’ என்றனர்.

Related Stories: