சீனாவில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் எதிரொலி...: ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் ரத்து!

பெய்ஜிங்: சீனாவில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அங்கு நடக்கவிருந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட சார்ஸ் வைரஸ்சின் வகையான  கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய்  மற்ற நாடுகளுக்கு  பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் உள்ள மனிதர்களை முதலில் தாக்கிய இந்த வைரஸ் அங்கிருந்து ஜப்பானுக்கு பரவி உள்ளது. பின்னர் தாய்லாந்து, தென்கொரியாவுக்கு பரவியுள்ளது. இதனை தங்களுக்கான எச்சரிக்கையாக கருதிய பல்வேறு நாடுகள் சீனாவின் விமானத்தில் இருந்து வரும் பயணிகளை கடுமையாக பரிசோதித்து வருகின்றனர்.

இதற்கிடையில், ஜப்பானில் நடப்பாண்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. இதற்காக உலகின் பல்வேறு நாடுகளில் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால், வூகான் பகுதியில் கரோனா வைரஸ் பரவி வருவதால் அங்கு நடக்கவிருந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்று பெண்கள் கால்பந்து போட்டிகள் நான்ஜிங் என்ற இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இதேபோல் குத்துச் சண்டை போட்டியை ரத்து செய்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் கரோனா வைரசால் வூகான் பகுதியில் மட்டும் 4,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கையை சீனா மறைப்பதாகவும், 479 பேர் வரை இறந்திருக்கக் கூடும் என்றும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: