தூத்துக்குடி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடானதற்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலின பெண்கள் பிரிவிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவியை பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து, 2019 டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி பனங்காட்டு படை கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்துள்ளார். பனங்காட்டுப்படை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 2008ம் ஆண்டு உதயமான தூத்துக்குடி நகராட்சியின் மேயர் பதவி, பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து 2011ம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, எல்லை மறுவரையறை மற்றும் இடஒதுக்கீட்டு விதிகளின் படி 2021ம் ஆண்டு வரை மேயர் பதவியை பொதுப்பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில், ஏழு வார்டுகள் மட்டுமே பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில், பொதுப்பிரிவினருக்கே மேயர் பதவியை ஒதுக்க வேண்டும் எனவும், மேயர் பதவியை சட்டவிரோதமாக பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும், ஆதனால் பட்டியலினத்தவத்களுக்கு ஒதுக்கீடு செய்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, வரும் பிப்ரவரி 25ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Related Stories: