சீனாவை மிரட்டி வரும் கரோனா வைரஸ்: பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு தடை விதிப்பு

வுகான்: 20 ஆண்டுகளுக்கு முன் ஆசிய கண்டத்தையே உலுக்கி 774 பேரை பலிகொண்ட ”சார்ஸ்” வைரஸ்சின் வகையான  கரோனா வைரஸ் சீன மக்களின் உயிரை காவு வாங்கி வருகின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்ட 9 பேர் உயிரிழந்த நிலையில் 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் சுகாதாரத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்நோய்  மற்ற நாடுகளுக்கு  பரவாமல் இருக்க பல்வேறு நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவில் உள்ள மனிதர்களை முதலில் தாக்கிய இந்த வைரஸ் அங்கிருந்து ஜப்பானுக்கு பரவி உள்ளது. பின்னர் தாய்லாந்து , தென்கொரியாவுக்கு பரவியுள்ளது. இதனை தங்களுக்கான எச்சரிக்கையாக கருதிய பல்வேறு நாடுகள் சீனாவின் விமானத்தில் இருந்து வரும் பயணிகளை கடுமையாக பரிசோதித்து வந்தனர்.

‘இந்த நோய் சுவாசக்குழாய் வழியாக பரவுகிறது, மேலும் வைரஸ் மாற்றம் அடைந்து, நோய் மற்ற நாடுகளுக்கு பரவுவதற்கான சாத்தியம் உள்ளது. நோயின் மூலத்தையும், பரவலையும் கண்டறிவதற்கான ஆராய்ச்சி முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்வோம்’ என தேசிய சுகாதார ஆணையத்தின் துணை அமைச்சர் லி பின் பீஜிங்கில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இந்நிலையில் சீனாவின் வுகான் நகரில் கரோனா வைரஸ் தாக்குதலால் பஸ், ரயில், விமானம், கப்பல் சேவைக்கு தடை செய்யப்பட்டுள்ளது.மக்களுக்கு மேலும் வைரஸ் தாக்குதல் பரவாமல் இருக்க பயண தடையை சீன அரசு அறிவித்துள்ளது.

Related Stories: