ஆமதாபாத் - மும்பை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்: ரூ.100 இழப்பீடு வழங்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி அறிவிப்பு

ஆமதாபாத்: ஆமதாபாத் - மும்பை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணியர் அனைவருக்கும் தலா ரூ.100 இழப்பீடு வழங்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது. குஜராத்தின் ஆமதாபாத் - மஹாராஷ்டிராவின் மும்பை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் கடந்த 19ம் தேதி துவங்கியது. ஆமதாபாத் - மும்பை இடையேயான தேஜஸ் அதிவேக ரயில் போக்குவரத்து சேவையை குஜராத் முதல்வரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான விஜய் ரூபானி, ஆமதாபாதில் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆமதாபாத் - மும்பை இடையேயான துாரத்தை இந்த ரயில் ஆறு மணி நேரத்தில் கடக்கும்.

இந்த ரயில் தாமதமாக இயக்கப்பட்டால் பயணியர் அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்து இருந்தது. இந்நிலையில், ஆமதாபாத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட ரயில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக, மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. இதையடுத்து, ரயிலில் பயணித்த, 630 பயணியருக்கு, தலா 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, ஐ.ஆர்.சி.டி.சி., நேற்று அறிவித்தது.இழப்பீடுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.

Related Stories: