இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி: போட்டி தேர்வு தேதி அறிவிப்பு

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் தொடர்பான தற்காலிக செயல்திட்ட அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுவது வழக்கம். அதைதொடர்ந்து இந்த ஆண்டில் நடக்க உள்ள போட்டித் தேர்வுகளின் தற்காலிக செயல்திட்ட அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இதன்படி வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடத்தில் 97 பேர் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு கடந்த 2019 நவம்பர் 27ம் தேதி வெளியிடப்பட்டது. அதற்கான போட்டித் தேர்வு பிப்ரவரி 15, 16ம் தேதிகளில் நடக்கிறது. அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019 நவம்பர் 27ம் தேதி வெளியிட்ட நிலையில், போட்டித் தேர்வு 2020 மே மாதம் 2, 5ம் தேதிகளில் நடக்கிறது.

* ஆசிரியர் பட்டம் (பிஎட்), பட்டயப் படிப்பு (டிடிஎட்) முடித்தவர்கள் ஆசிரியர் பணிக்காக நடத்தப்படும் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு 2020 மே 4ம் தேதி வெளியாகும். இடைநிலை ஆசிரியர் பணிக்கான தாள் 1க்கான எழுத்து தேர்வு 2020 ஜூன் 27ம் தேதியும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தாள் 2க்கான தேர்வு 2020 ஜூன் 28ம் தேதியும் நடக்கிறது.

* முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 497ல் தகுதியுள்ளவர்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2020 ஜூலை 1ம் தேதி வெளியிடப்படும். போட்டித் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.

* நகராட்சி, மாநகராட்சி, கள்ளர் சீரமைப்பு, ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அரசு நிர்வாகத்தின் கீழ் நேரடியாக இயங்கும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் தகுதித் தேர்வுக்கு பிறகும் மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டும். இதன்படி 730 பேர் நியமிக்கப்படுவார்கள். அதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பு 2020 ஜூலை 9ம் தேதி வெளியிடப்படும்.

* நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் 572 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு 2020 ஜூலை 17ம் தேதி வெளியாகும்.

Related Stories: