சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய 17 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். புதிய வாக்காளர்களுக்கு இந்த மாத இறுதியில் இருந்து அடையாள அட்டை விநியோகம் செய்யப்படும்.
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த டிசம்பர் 23ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் 6,00,01,329 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 2,96,46,287, பெண்கள் 3,03,49,118, மூன்றாம் பாலினத்தவர் 5,924 பேர்.இதைதொடர்ந்து, 2020 ஜனவரி 1ம் தேதியுடன் 18 வயது நிறைவடைந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், நீக்கம், திருத்தம் செய்ய டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 22ம் தேதி வரை (நேற்று) விண்ணப்பம் அளிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக ஜனவரி 4, 5 மற்றும் 11, 12 ஆகிய 4 நாட்கள் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாமும் நடந்தது. இந்த 4 நாட்கள் சிறப்பு முகாம்களிலும் பொதுமக்கள் அதிகம் பேர் கலந்துகொண்டு தங்கள் பெயர்களை சேர்க்கவும், முகவரி மாறியவர்கள் திருத்தம் செய்யவும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நான்கு நாட்கள் நடந்த சிறப்பு முகாமில் மட்டும் 12 லட்சம் பேர் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பம் செய்தனர். அதேபோன்று, அலுவலக நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று வரை, வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடம் அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அலுவலகங்களில் அளிக்கலாம். www.nvsp.in என்ற இணையதள முகவரி மற்றும் வாக்காளர் உதவி கைப்பேசி செயலி மூலமும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையம் அறிவித்தபடி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13,16,921 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய 4 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று கூறியதாவது: கடந்த ஒரு மாதத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மட்டும் 13 லட்சத்து 16 ஆயிரத்து 921 பேரும், நீக்கம் செய்ய 1,02,210 பேரும், திருத்தம் செய்ய 1,73,926 பேரும், முகவரி மாற்றம் செய்ய 1,08,548 பேரும், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் 57 பேர் என மொத்தம் 17,01,662 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் நீக்கம் செய்ய விண்ணப்பம் அளித்த 17 லட்சம் பேரின் வீடுகளுக்கும் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை நடத்தும் பணியில் ஈடுபடுவார்கள். அப்போது, விண்ணப்பம் கொடுத்த முகவரியில் அவர்கள் வசிப்பதை உறுதி செய்து கொள்வார்கள். வீடுகளுக்கு வந்து விசாரிக்கும்போது விண்ணப்பம் செய்தவரின் அனைத்து தகவல்களும் உண்மையாக இருக்கும்பட்சத்தில் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.பின்னர் வருகிற 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் முதல் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கும். இந்த மாத இறுதியில் இருந்து பிப்ரவரி மாதத்திற்குள் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். தொடர்ந்து, வருகிற பிப்ரவரி 14ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்டம் வாரியாக விண்ணப்பித்தவர்கள் விவரம்
மாவட்டம் பெயர் சேர்க்க வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நீக்கம் திருத்தம் முகவரி மாற்றம் மொத்தம்
சென்னை 55475 11 2447 8227 9276 75436
திருவள்ளூர் 76618 0 1632 8258 5153 91661
காஞ்சிபுரம் 89454 1 3569 8054 6047 107125
வேலூர் 57469 2 3986 19930 4865 86252
கிருஷ்ணகிரி 42038 0 3009 5074 2919 53040
தர்மபுரி 31010 0 3400 2891 1788 39089
திருவண்ணாமலை 40859 0 3831 4374 2541 51605
விழுப்புரம் 67935 3 3392 6714 3901 81945
சேலம் 63465 0 11178 8788 6018 89449
நாமக்கல் 31175 2 5922 5601 4310 47010
ஈரோடு 39988 0 7644 5547 3210 56389
நீலகிரி 9439 0 739 1657 1254 13089
கோவை 81159 4 6384 10072 8192 105811
திண்டுக்கல் 39359 0 945 4448 3178 47930
கரூர் 19697 0 2128 3263 2798 27886
திருச்சி 47870 1 1746 7206 5179 62002
பெரம்பலூர் 12773 2 647 2647 738 16807
கடலூர் 40301 6 3101 6257 2829 52494
நாகப்பட்டினம் 25337 0 2405 3060 1658 32460
திருவாரூர் 19995 0 7099 2412 1490 30996
தஞ்சாவூர் 45118 0 3482 5307 3511 57418
புதுக்கோட்டை 37138 4 722 2941 1757 42562
சிவகங்கை 25117 9 1016 2848 2000 30990
மதுரை 56914 4 6417 4727 3677 71739
தேனி 23161 0 1150 2466 1752 28529
விருதுநகர் 42101 0 3040 5081 3662 53884
ராமநாதபுரம் 14811 2 1335 2415 1158 19721
தூத்துக்குடி 29903 1 1252 4300 3251 38707
திருநெல்வேலி 52240 1 2849 9063 4384 68537
கன்னியாகுமரி 35939 3 2383 2719 1132 42176
அரியலூர் 13014 0 190 898 462 14564
திருப்பூர் 50049 1 3170 6681 4458 64359
மொத்தம் 13,16,921 57 1,02,210 1,73,926 1,08,548 17,01,662