அந்தந்த பள்ளிகளிலேயே 5, 8ம் வகுப்பு தேர்வு மையங்கள்: தொடக்கக் கல்வி துறை அறிவிப்பு

சென்னை: தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் 5, 8ம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளில் தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவித்துள்ளது.  தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த அரசு உத்தரவிட்டதை அடுத்து மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வு நடக்க இருக்கிறது. தேர்வு மையங்கள் அருகாமை பள்ளிகளில் உருவாக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பி இருந்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகளில் தேர்வு எழுதலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, அந்தந்த பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும் என்று தொடக்க கல்வித்துறை இயக்குநர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்க கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் (திருத்த) சட்டம் 2019ன்படி, மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்து வகை பள்ளிகளிலும் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டின் இறுதியில் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வு நடத்துவது  குறித்து ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் தொடக்க கல்வித்துறையின் மூலம் தெரிவிக்கப்பட்டது. பொதுப் பள்ளி கல்வி வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தற்போது அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது. இதைப் பின்பற்றி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 5, 8ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு அதே பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்க வேண்டும். மேற்கண்ட தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5, 8ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. பிற அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் மேற்கண்ட வகுப்புகள் படிக்கும் மாணவர்களுக்கும் தேர்வுக் கட்டண விலக்கு அளிக்க வேண்டும். கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கும் கட்டண விலக்கு அளிக்க வேண்டும்.

இது தவிர தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் 5ம் வகுப்பு தேர்வு எழுத 100, 8ம் வகுப்பு தேர்வு எழுத 200 கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். தேர்வுக்கு பிறகு 5ம் வகுப்பு விடைத்தாள்கள் 2020 ஏப்ரல் 28ம் தேதிக்குள்ளும், 8ம் வகுப்பு விடைத்தாள்கள் 2020 ஏப்ரல் 25ம் தேதிக்குள்ளும் திருத்தி முடித்து ஒப்படைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: