சமூக நீதியைக் காக்க 2021ம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:  இந்தியாவில் 2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என உத்தரபிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் சிங் யாதவ் கூறியிருக்கிறார். இக்கோரிக்கைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது, இது வரவேற்கத்தக்கது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் இந்தியாவில் முழுமையான சமூகநீதியை உறுதி செய்ய முடியாது. தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றமும் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதை சாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்.

பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை பல்வேறு தொகுப்புகளாக பிரித்து வழங்க நீதிபதி ரோகிணி ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. குறிப்பிட்ட சாதிகள் அடங்கிய ஒவ்வொரு தொகுப்புக்குமான இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானிக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது கட்டாயமாகும். கணக்கெடுப்பு ஆவணத்தில் பிற பிற்படுத்தப்பட்டவர் என்று குறிப்பிடும் பகுதியில் அவரது சாதியையும் சேர்த்துக் குறிப்பிட்டால் போதுமானது. இந்தியாவில் பின்தங்கிய மக்களை முன்னேற்ற இடஒதுக்கீடுதான் சிறந்த ஆயுதம் எனும் சூழலில், அந்த ஆயுதத்தை செம்மையாக பயன்படுத்த சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி புள்ளிவிவர தொகுப்பை உருவாக்குவது அவசியமாகும்.2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: