நடப்பாண்டில் வருவாய் குறைந்தது ஏன்? 27ல் பதிவுத்துறை ஐஜி டிஐஜிக்களிடம் விசாரணை: வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடக்கிறது

சென்னை: பதிவுத்துறையில் நடப்பாண்டில் வருவாய் குறைந்தது ஏன்? என்பது தொடர்பாக வரும் 27ம் தேதி அனைத்து மண்டல டிஐஜிக்களிடம் ஐஜி விசாரணை நடத்துகிறார். பத்திரப்பதிவுத்துறையின் மூலம் வீடு, விளை நிலங்கள் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதை தவிர்த்து திருமணம், சிட்பண்ட், சங்க பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 8 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 2017-18ம் நிதியாண்டில் 9 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு எட்டியது. கடந்த 2018-19ம் நிதியாண்டில் 11 ஆயிரம் கோடி இலக்கு எட்டியது. இதை தொடர்ந்து நடப்பாண்டில் 13,123 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை பதிவுத்துறை அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  ஆனால், ஆன்லைன் பதிவில் உள்ள குளறுபடி உடனுக்குடன் சரி செய்யப்படாததால் பத்திரபதிவின் வேகம் குறைந்தது. அதே போன்று அங்கீகாரம் இல்லாத மனைகளை அனுமதி தருவதில் டிடிசிபி, சிஎம்டிஏ காலதாமதம் செய்து வருகிறது.

மேலும், பதிவு கட்டணமும் அதிகமாக இருப்பதால் விற்பனை பத்திரம், தானம், செட்டில்மென்ட் பத்திரப்பதிவும் குறைந்து விட்டது. இதனால், கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை பதிவுத்துறையால் 7 ஆயிரம் கோடி மட்டுமே வருவாய் அடைய முடிந்துள்ளது. இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் 6 ஆயிரம் கோடி வருவாய் எட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில் கடந்த 2018-19ம் ஆண்டில் 11 ஆயிரம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்படடுள்ள நிலையில், நடப்பாண்டில் அந்த வருவாயை கூட எட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் பதிவுத்துறையில் வருவாய் குறைந்ததற்கு என்ன காரணம் என்பது தொடர்பாக வரும் 27ம் தேதி அனைத்து மண்டல டிஐஜிக்களிடம் ஐஜி ஜோதி நிர்மலாசாமி விசாரணை நடத்துகிறார்.

இது குறித்து பதிவுத்துறை ஐஜி அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து மண்டல துணை தலைவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் (முத்திரை), தனித்துணை ஆட்சியர்கள் (முத்திரை) மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) ஆகியோரின் டிசம்பர் 2019 மாத பணி சீராய்வு கூட்டம் பதிவுத்துறை தலைவர் தலைமையில் வரும் 27ம் தேதி காலை 11 மணியளவில் பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் காணொலி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. சென்னை மண்டலத்தை பொருத்து உரிய அலுவலர்கள் பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் நேரடியாக வந்து கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. சீராய்வு கூட்டம் தொடர்பான புள்ளி விவரங்களுடன் கூட்டத்தில் தவறாது கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: