×

பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பிய ரஜினிகாந்த் மீது வழக்கு பதியக்கோரி மேலும் ஒரு மனு: உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக  திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் நடந்த துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.இதையடுத்து, கோவை காட்டூர் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை மாவட்ட தலைவர் நேருதாஸ், ரஜினிகாந்த் மீது புகார் கொடுத்தார். புகாரில், பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதுடன், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளதால், அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து நேருதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.  ஏற்கனவே, நடிகர் ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி  திராவிடர் விடுதலை கழகத்தின்  சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தொடர்ந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags : Rajinikanth ,Periyar One ,Periyar , Periyar, Rajinikanth, High Court
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...