தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய விவகாரம் க்யூ பிரிவில் இருந்து என்ஐஏவுக்கு வழக்கு மாற்றம்: தீவிரவாதி காஜா மொய்தீனுக்கு நேரடியாக உதவிய 10 பேரை காவலில் எடுக்க முடிவு

சென்னை: தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய விவகாரத்தில் க்யூ பிரிவு போலீசார் கைது ெசய்த 10 தீவிரவாதிகள் மீதான வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து தீவிரவாதி காஜா மொய்தீனுக்கு நேரடியாக உதவிய 10 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவராக இருந்த சுரேஷ்குமார் (48) கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 தீவிரவாதிகளுக்கு போலி முகவரி மூலம் 200 சிம்கார்டுகள் வாங்கி கொடுத்த காஞ்சிபுரத்தை சேர்ந்த பச்சையப்பன், ராஜேஷ் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் 21ம் தேதி க்யூ பிரிவு போலீசார் ஐபிசி 465, 468, 471, 120(பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

 அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீவிரவாதி காஜா மொய்தீனுக்கு நேரடியாக ஆயுத உதவி செய்ததாக  கடந்த 7ம் தேதி பெங்களூரை சேர்ந்த முகமது ஹனிப் கான் (29), இம்ரான் கான் (32), முகமது சையது (24) ஆகியோரை க்யூ பிரிவு போலீசார் கைது ெசய்தனர். மேலும், இந்த வழக்கில் லியாகத் அலி, அன்பரசன், அப்துல் ரகுமான் மற்றும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதாக பெங்களூரில் இஜாஸ் பாஷா ஆகியோரை ஐபிசி 465,468,471,120 (பி) மற்றும் ஆயுத தடை சட்டத்தின் கீழ் க்யூ பிரிவு போலீசார் கைது செய்தனர். அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் நேரடியாக தொடர்பில் இருந்த தீவிரவாதி காஜா மொய்தீனுக்கு அனைத்து வகையிலும் உதவியாக இருந்துள்ளனர். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் குடியரசு தினத்தன்று மிகப்பெரிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்த சதித்திட்டம் தீட்டியதும் டெல்லி போலீசாரால் கைது ெசய்யப்பட்ட காஜா மொய்தீன் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

சர்வதேச தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்பு உள்ளதால் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.  இதையடுத்து க்யூ பிரிவு போலீசார் தீவிரவாதிகளுக்கு 200 சிம்கார்டுகள் விற்பனை செய்த நபர்கள் மற்றும் தீவிரவாதி காஜா மொய்தீனுக்கு நேரடியாக உதவிய 10 பேர் மீதான வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு நேற்று மாற்றியுள்ளது.  இதையடுத்து தேசிய புலனாய்வு முகமை 10 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இதுதவிர சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கும் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: