தமிழ் மொழியில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய குட முழுக்கு: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை:  தஞ்சையில் பிப்ரவரி 5ம்தேதி நடைபெறவுள்ள பிரகதீஸ்வரர் ஆலயக் குட முழுக்கினை தமிழில் நடத்துவதா, சமஸ்கிருதத்தில் நடத்துவதா என்கிற கேள்வியே பொருத்தமற்றது என மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது. பிரகதீஸ்வரர் ஆலய குடமுழுக்கு உள்பட அனைத்து ஆலயங்களிலும் வழிபாட்டு மொழியாக தமிழை இடம்பெறச் செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.  ஆனால், இதற்கு நேர்மாறாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இந்து அறநிலையத்துறையின் சார்பில் அளித்துள்ள பதிலுரையில், இதற்கு முன்பு தமிழ் ஆகமங்களின் படியே ஆலய வழிபாடு நடந்தபோதும், குடமுழுக்கு சமஸ்கிருத மொழியிலேயே நடைபெற்றது என்றும், தற்போதும் அதே நடைமுறையே பின்பற்றப்படும் என்றே கூறப்பட்டுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

உலகின் மூத்த மொழியான தமிழுக்கு உரிய முன்னுரிமை அளிக்கவும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திடவும் தமிழில் குடமுழுக்கு நடத்துவது அவசியமாகும். அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டிய நிலையில், அதற்கு முதல்படியாக தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழாவை தமிழ்மொழியில் நடத்த தமிழக அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: