காட்பாடி அருகே காளை விடும் விழா: மாடு முட்டி ஒருவர் பலி: 19 பேர் படுகாயம்

வேலூர்: காட்பாடி அருகே மேல்மாயில் கிராமத்தில் நடந்த காளை விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் ஒருவர் பலியானார். 19 பேர் படுகாயமடைந்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மேல்மாயில் கிராமத்தில் 128வது ஆண்டு காளை விடும் விழா நேற்று நடந்தது. இதற்காக வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 171 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. குடியாத்தம் ஆர்டிஓ (பொறுப்பு) தினகரன், தாசில்தார் சுஜாதா முன்னிலையில் காளை விடும் விழா தொடங்கியது.குறிப்பிட்ட தூரத்தை மிக குறைந்த நேரத்தில் கடந்த காளைகள் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டன. இவ்விழாவில் காளை ஓடும் பாதையில் வளைவான இடத்தில் அதிகளவில் இளைஞர்கள் குவிந்தனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை விரட்டுவதற்காக அடிக்கடி தடியடி நடத்தினர். அப்போது ஏற்பட்ட குழப்பம், கூச்சலை கட்டுப்படுத்த மீண்டும், மீண்டும் போலீசார் தடியடி நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து நடந்த விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்தன.

Advertising
Advertising

அப்போது காளைகள் முட்டி 19க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பள்ளிகொண்டா அருகே வேப்பங்கால் கிராமத்தைச் சேர்ந்த சிவசக்தி(35) பலியானார். பின்னர் படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாடு விடும் விழாவை காண வேலூர், குடியாத்தம், அணைக்கட்டு, திருப்பத்தூர், சித்தூர் உட்பட ஆந்திர மாநிலத்தில் இருந்தும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். மாடு விடும் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் மரங்கள், மேல்நீர் தேக்க தொட்டியில் ஆபத்தை உணராமல் ஏறி நின்று மாடு விடும் விழாவை கண்டு ரசித்தனர். இவ்விழாவில் வெற்றிபெற்று முதல் பரிசு பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த நந்திதேவன் என்ற காளையின் உரிமையாளருக்கு 1 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இவ்வாறு மொத்தம் 45 பரிசுகள் வழங்கப்பட்டன. மாடு விடும் விழாவையொட்டி குடியாத்தம் டிஎஸ்பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: