ஒத்திவைக்கப்பட்ட இடங்களில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் 30ம் தேதி நேர்மையாக நடத்தப்படும்: மாநில தேர்தல் ஆணையம் ஐகோர்ட் கிளையில் உறுதி

மதுரை:  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பொட்டல்பட்டியைச் சேர்ந்த சிங்கராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய 19வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். மொத்தமுள்ள 24 உறுப்பினர்களில் 15 கவுன்சிலர் இடங்களில் திமுக வெற்றி பெற்றது. தலைவர் பதவிக்கு போட்டியிட திமுகவிற்கு பெரும்பான்மை இருந்தது. ஜன.11ல் தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கையின்போது அதிமுகவினர் தகராறில் ஈடுபட்டு வாக்குப்பெட்டி மற்றும் டேபிள்களை தூக்கி எறிந்தனர். நாற்காலிகளை வீசினர். பின்னர் போலீசார் துணையுடன் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தனர். எனவே, ராஜபாளையம் ஒன்றியத்தலைவர் பதவிக்கான தேர்தலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வு நீதிபதி கண்காணிப்பில் நடத்தவும், மூத்த ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதேபோல், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்தக் கோரி திமுகவைச் ேசர்ந்த நிர்மலா, தேனி மாவட்டம், சின்னமனூர் ஒன்றிய தேர்தலை நடத்தக் கோரி சித்ரா  என்பவரும் தனித்தனியே மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நேற்று நீதிபதிகள் எம்.துரைச்சுவாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.  மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘திமுக பெரும்பான்மை பெற்ற இடங்களில் தலைவர் பதவி கிடைப்பதை தவிர்க்கும் வகையில் வேண்டுமென்றே தேர்தலை நிறுத்தியுள்ளனர். எனவே, வெளிப்படையாக தேர்தல் நடத்த வேண்டியது அவசியம்’’ என்றார். கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், தேர்தல் ஆணைய வக்கீல் ராஜா கார்த்திகேயன் ஆகியோர் ஆஜராகி, ‘‘ஜன.11ல் ஒத்தி வைக்கப்பட்ட மறைமுகத் தேர்தல்கள் ஜன.30ல் நேர்மையாக நடத்தப்படும். காலை 10.30 மணிக்கு தேர்தல் துவங்கும். நீதிமன்றத்தின் உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படும். தேவையான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக தேர்தல் முழுமையாக வீடியோவில் ஒளிப்பதிவு செய்யப்படும். சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கும், 26 ஒன்றியத்தலைவர் மற்றும் 41 துணைத்தலைவர் பதவிக்கும் 266 ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கும் ேதர்தல் நடத்தப்படும்’’ என்றனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை முடித்து வைத்தனர்.

Related Stories: