×

பத்திரிகைகளில் பெயர் வரவேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் பேசுகிறார்: அமைச்சர்கள் கண்டனம்

ஈரோடு: ‘‘பத்திரிகைகளில் பெயர் வரவேண்டும் என்பதற்காக ரஜினிகாந்த் பேசுகிறார்’’ என்று தமிழக அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னையில் நடந்த பத்திரிகை விழா ஒன்றில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது, 1971-ம் ஆண்டில் பெரியார் பேரணி மற்றும் போராட்டம் குறித்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சு, பெரியாரை அவமதிப்பதாக உள்ளது என்று தி.க., திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளன. கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளன. இந்தநிலையில், ரஜினியின் பேச்சுக்கு தமிழக அமைச்சர்கள் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்து நேற்று கருத்து தெரிவித்துள்ளனர். ஈரோட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ரஜினி பேச்சை பெரியதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. சமீபகாலமாக சிலர், தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள பத்திரிகைகளில் பெயர் வர வேண்டும் என்பதற்காக இதுபோல தேவையில்லாமல் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

உதயகுமார்: மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறும்போது, ‘‘தந்தை பெரியார் சமூக நீதிக்காவலராக இருந்தவர். பெண் விடுதலைக்காக போராடியவர். தந்தை பெரியார், கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோர் சமூக நீதிக்காக போராடியவர்கள். அவர்களுடைய கொள்கைகள் தமிழக மக்களுக்கு தெரியும். தமிழ்நாட்டில் ரஜினி தர்பார் நடத்திக் கொண்டிருக்கிறார். அதற்கான தீர்ப்பை மக்கள் விரைவில் தரப்போகிறார்கள். இதுகுறித்த சர்ச்சை எழுந்தபோதே ரஜினிகாந்த் தவிர்த்திருக்கலாம். அல்லது மன்னிப்பு கேட்டு இருக்கலாம். ரஜினிகாந்தை போல் ஆயிரம் ரஜினிகாந்த் வந்தாலும், யாராலும் பெரியாரின் புகழை மறைக்க முடியாது’’ என்று கூறினார்.

காமராஜ் அறிவுரை:  திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ், ‘‘தந்தை பெரியார் தமிழகத்தை தட்டி எழுப்பிய பெருந்தலைவர் ஆவார். அவரது வழியில் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வழிகாட்டிகளாக இருந்து வந்துள்ளனர். எனவே தந்தை பெரியார் குறித்து தேவையற்ற கருத்துக்களை நடிகர் ரஜினி தவிர்த்து கொள்ள வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார். ஈரோடு மாவட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, ‘அதிமுகவை பொறுத்தவரை தந்தை பெரியார் காட்டிய வழியில் செல்கிறோம். பெரியரால் அடித்தட்டு மக்கள் வளர்ந்துள்ளனர். எனவே, அந்த வழியில் தொடர்ந்து பயணிப்போம்’ என்றார்.


Tags : Rajinikanth ,Ministers , Newspapers, Rajinikanth, Ministers
× RELATED குழந்தைகள் மருந்தில் கலப்படம்...