×

மனமிருந்தால் மார்க்கம் உண்டு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பிச்சை எடுத்து உதவும் முதியவர்: குமரியில் 3 பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கினார்

ஆரல்வாய்மொழி: ‘கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே...’ என்று தமிழ் நூல்கள் வலியுறுத்துகின்றன. பிச்சை எடுத்தாவது கல்வி கற்கவேண்டும் என்பது இதன் பொருள். ஆனால் ஒரு முதியவர் பிச்சை எடுத்து அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார் தூத்துக்குடி  மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆலங்கிணறை சேர்ந்தவர் பாண்டி(66). வசதியான குடும்பத்தில் பிறந்த இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உண்டு.   அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து வேலையும் வாங்கி கொடுத்துள்ளார். தனது 55வது வயதில் மனைவி இறந்ததும், குடும்பத்தை விட்டு   விலகி திருச்செந்தூர் சென்று பிச்சை எடுத்து வாழ்ந்து வந்தார். இதில் தனது தேவையைவிட அதிக பணம் வந்ததால் அரசு பள்ளி மாணவர்களுக்கு  உதவ வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. அதன்படி எந்த பள்ளிக்கு உதவி  தேவைப்படுகிறதோ அந்த பள்ளி இருக்கும் பகுதியில் பிச்சை எடுத்து உதவி  செய்து வருகிறார்.

இந்த வகையில் தோவாளை, செண்பகராமன்புதூர், வீர நாராயணமங்கலம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க குடிநீர் சுத்திகரிப்பு சாதனம்  வாங்கி கொடுக்க எண்ணினார். இதற்காக தோவாளை சுற்றுவட்டார  பகுதிகளில் அவர் பிச்சை எடுத்தார். அதில் கிடைத்த பணத்தால் 3 பள்ளிகளுக்கும் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை  வாங்கி கொடுத்தார்.  இதுகுறித்து பாண்டி கூறியதாவது: எனது மனைவி இறந்ததால் மனவேதனை அடைந்த நான் அடிக்கடி திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று சில மாதங்கள்  தங்கி விடுவேன்.  உறவினர்களிடம் மரியாதை கிடைக்காததால், பிச்சை எடுத்து வாழ துவங்கினேன். எனக்கு உணவு  தானமாக கிடைத்ததுடன் பணம் அதிகமாக கிடைத்ததால், அரசு தொடக்க பள்ளி மாணவர்களுக்கு உதவ எண்ணினேன்.

முதலில் பள்ளி அதிகாரிகளை சந்தித்து, பள்ளிக்கு என்ன தேவை என்று அறிந்துகொள்வேன். பின்னர் சுற்றுவட்டார பகுதிகளில் பிச்சை எடுத்து, தேவையான பொருட்களை  வாங்கி கொடுப்பேன். எனது உடலில் உயிர் இருக்கும் வரை நான் பிச்சை எடுத்து கிடைக்கும்  பணத்தால் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்வேன் என கூறினார்.

Tags : schoolgirls ,government school students ,schools ,Kumari , Government school students, begging, elderly, kumari, drinking water purifier
× RELATED அரசு பள்ளி மாணவர்களுக்கு நிவாரணம்