கவரிங் நகையால் கடுப்பு பெண்ணுக்கு கத்திகுத்து

கோவை: கோவையில் தான் பறித்தது ‘கவரிங் நகை’ என்று தெரிந்ததால் ஆத்திரமடைந்த திருடன் மூதாட்டியை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை பாப்பம்பட்டியை சேர்ந்தவர் சின்னத்துரை. இவருடைய மனைவி குமுதவல்லி (52). இவர், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல வேலைகளை முடித்துவிட்டு அங்குள்ள தியாகி சண்முகாநகர் வழியாக நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், திடீரென குமுதவல்லியின் கழுத்தில் கிடந்த நகையை பறித்துவிட்டு தப்பிச்சென்றார். குமுதவல்லியும் கவரிங் நகைதானே என்று பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் சிறிது நேரத்தில் திரும்பி வந்த அந்த நபர் குமுதவல்லியிடம் தங்கம் இல்ல, கவரிங் நகைன்னு ஏன் முன்னாடியே சொல்லல? என்று கோபத்தோடு கேட்டுள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் அவரை குத்திவிட்டு அங்கிருந்து சென்றார். இதில் குமுதவல்லிக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். திருடன் ஒருவன் தான் பறித்தது கவரிங் நகை என்பதால் அதை அணிந்திருந்த மூதாட்டியை கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: