குடியுரிமை திருத்த சட்டத்துக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு: மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவகாசம்,.. 143 மனுக்கள் மீது 5 நீதிபதி அமர்வு விசாரணை

புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட  வழக்கில் தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.  பாகிஸ்தான், வங்கதேசம்,  ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக  இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் மதத்தைச் சாராதவர்களுக்கு  குடியுரிமை வழங்கும் வகையிலான, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கடந்த 10ம் தேதி அமல்படுத்தியது. அந்தச் சட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் மனோஜ்  ஜா, திரிணாமுல்  காங்கிரஸ் எம்.பி மவுஹா மொய்த்ரா, அகில இந்திய  மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி, ஜாமியா உலேமா-ஏ-ஹிந்த், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம், அசாம் கன பரிஷத்,  அமைதி கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், திமுக, மக்கள் நீதி மய்யம், சட்டப்  படிப்பு மாணவர்கள் உள்ளிட்ட 143 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

 முன்னதாக, கடந்த டிச. 18ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நடைபெற்ற விசாரணையின்போது, குடியுரிமை திருத்தச் சட்ட அமலாக்கத்துக்குத் தடை விதிக்க மறுக்கப்பட்டது. இச்சட்டத்துக்கு எதிரான மனுக்கள் மீது ஜனவரி 2வது வாரத்துக்குள்   பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, கேரளா,  பஞ்சாப் ஆகிய மாநில சட்டப் பேரவையில் அம்மாநில  முதல்வர்களால் தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன.  அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் வாதிடுகையில், ‘`மொத்தம் 143 மனுக்களில் எங்களுக்கு 60 மனுக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து மனுக்களுக்கும் பதில் அளிக்க எங்களுக்கு அவகாசம் தேவை,’’’ என்றார். அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ` குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு நடவடிக்கை தொடங்கி விட்டதால் அதை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இவ்வழக்கை அரசியல் சாசன  அமர்விற்கு மாற்ற வேண்டும்,’’’ என கோரிக்கை விடுத்தார்.  இது தொடர்பாக நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், ‘இவ்வளவு மனுக்கள் ஏன் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பதற்கான காரணத்தை அறிய முடியவில்லை. மனுக்கள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். அனைத்து மனுக்களையும் விசாரிக்காமல் ஒருதலைபட்சமான உத்தரவு பிறப்பிக்க போவதில்லை. குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் விசாரணை செய்யாமல் எந்த தடை உத்தரவும் விதிக்க முடியாது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். மேலும், இந்த வழக்கை 5 நீதிபதிகள் ெகாண்ட அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுகிறோம்,’ என  தெரிவித்தனர்.

Related Stories: