‘குடியுரிமை சட்டத்துக்கு பலரும் எதிர்ப்பு’ பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறி செல்ல தயார் : அமைச்சர் பேச்சால் பரபரப்பு

இளையான்குடி: பாஜ கூட்டணியில் இருந்து எந்த நேரத்திலும் வெளியேற தயாராக உள்ளதாக அமைச்சர் பாஸ்கரன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் நேற்று முன்தினம் இரவு அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் பாஸ்கரன் பேசியதாவது: பாஜ கூட்டணியை விட்டு எந்த நேரத்திலும் பிரிந்து செல்ல தயாராக இருக்கிறோம். குடியுரிமை சட்டத்திற்கு அமைச்சரவையில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீங்கள் (மக்கள்) எங்களை ஒதுக்கி விட்டீர்களே தவிர, நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 3 ஓட்டு, 5 ஓட்டு வித்தியாசத்தில்தான் தோல்வியடைந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகமே எங்கள் கையில் உள்ளது. நாங்கள் நினைத்திருந்தால் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. முறையாக நடந்து கொள்ளுமாறு முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாங்கள் சாதாரண மனிதர்கள். நீங்கள் எங்கேயும், எப்போதும் எங்களை அணுகலாம். எங்கள் எம்எல்ஏ, சேர்மன் மற்றும் நிர்வாகிகளின் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கலாம். இவ்வாறு பாஸ்கரன் பேசினார். ஏற்கனவே அமைச்சர் பாஸ்கரன், ‘‘நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் எடுபடாது. விஜயகாந்த் நிலைமைதான் ஏற்படும்’’ எனக்கூறி கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்டி அடித்தார் பாஸ்கரன்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அமைச்சர் பாஸ்கரன்  நேற்று கூறுகையில், ‘‘ரஜினிகாந்த் பேசியது குறித்து அதிமுக தலைமையில் இருந்து கருத்து தெரிவித்துள்ளனர். குடியுரிமை சட்டம் குறித்து சட்டசபையில் முதல்வர் தெளிவாக விளக்கி உள்ளார். பாஜவுடன் உள்ள உறவை பிரிக்க முடியாது. மேடையில் குடியுரிமை சட்டத்தை பற்றித்தான் விளக்கி கூறினேன்’’ என்றார்.

Related Stories: