உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஊழியருக்கு மீண்டும் வேலை?

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருந்தபோது,  அவர் மீது பாலியல் தொல்லை புகார் கூறிய பெண் ஊழியருக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது.  உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் மீது நவீன் குமார் என்பவர் கடந்தாண்டு மார்ச் மாதம் பண மோசடி புகார் அளித்தார். அதனால், அந்த பெண் ஊழியர் பணிமாற்றம் செய்யப்பட்டு, பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் கடிதம் ஒன்று அனுப்பினார். அதில், அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் தொல்லை குற்றச்சாட்டை சுமத்தினார். அப்போது இந்த புகாரை விசாரித்த தற்போதைய நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான விசாரணை குழு, குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என கூறி விட்டது.

இந்நிலையில், இந்த பெண் ஊழியர் மீதான மோசடி புகாரை நவீன் குமார் சமீபத்தில் திடீரென வாபஸ் பெற்றார். இதையடுத்து, அந்த பெண் ஊழியருக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வேலை வழங்கப்பட்டு இருப்பதாகவும், அவர் பணியில் சேர்ந்து விட்டு விடுமுறையில் சென்று விட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள நிலுவையும் வழங்கப்பட்டு இருப்பதாக உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் கூறியுள்ளன.

Related Stories: