×

கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மேற்குவங்க சட்டப்பேரவையில் 27ம் தேதி சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் : பேரவை விவகார அமைச்சர் தகவல்

கொல்கத்தா: கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதுபோல், மேற்குவங்க சட்டப்பேரவையில் வரும் 27ம் தேதி சிஏஏ எதிர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மக்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கேரளா சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சரவை கூட்டம் 14ம் தேதி நடைபெற்றது. இதில், சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும், ‘சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதை நானும் தடுக்க மாட்டேன்; காங்கிரஸ் கட்சியும் தடுக்காது. ஆனால், சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு பாகுபாடு காட்டப்படுகிறது’ என அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இதனையடுத்து பஞ்சாப் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில், கேரளா, பஞ்சாபை தொடர்ந்து மேற்கு வங்க சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வரும் 27ம் தேதி தீர்மானத்தை கொண்டு வரும் என்று மாநில சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி தெரிவித்தார். முன்னதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிக்கும் தீர்மானத்தை ஆதரிக்க அவர் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளையும் அணுகி ஆதரவு கோரினார். அப்போது சாட்டர்ஜி கூறியதாவது: நாங்கள் சிஏஏ-வை எதிர்க்கும் தீர்மானத்தை விதி 169 இன் கீழ் சட்டப்பேரவை சபாநாயகர் பிமன் பானர்ஜிக்கு சமர்ப்பித்தோம். ஜன.27ம் தேதி மதியம் 2 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம் நடக்கும். அப்போது சிஏஏ-வுக்கு எதிரான தீர்மானம் அரசால் தாக்கல் செய்யப்படும். மற்ற அனைத்து தரப்பினரும் இதை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன்பின், தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்படும். சிஏஏ-வுக்கு உச்சநீதிமன்றத்தை நாடுவதற்கு முன், மக்கள் ஆதரவுடன் போராட்டங்களை முன்ெனடுப்போம் என்றார்.

சிஏஏ.வை எதிர்த்து மம்தா மீண்டும் பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி டார்ஜிலிங் மலைப்பகுதியில் நேற்று 4 கி.மீ. தூர பேரணி நடத்தினார். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதை தன் மாநிலத்தில் அமல்படுத்தப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சிஏஏ.க்கு எதிராக தொடர்ந்து மாநிலத்தில் அவர் பல பேரணிகளை நடத்தி வருகிறார். இந்த வகையில் டார்ஜிலிங் மலைப்பகுதியில் நேற்று அவர் சிஏஏ.வை கண்டித்து பேரணி நடத்தினார். இது சுமார் 4 கி.மீ. தூரத்துக்கு நடந்தது. பானு பக்த பவனில் தொடங்கிய பேரணி, சோக்பஜார் பகுதியில் நிறைவடைந்தது. பேரணி முடிவில் பேசிய மம்தா, `வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்ட ஒருவர் எப்படி இந்திய குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க முடியும் என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார்.


Tags : CAA ,states ,West Bengal Legislative Assembly ,Kerala ,Punjab , CAA resolution , West Bengal assembly
× RELATED லாரி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்: பல்வேறு தீர்மானம் நிறைவேற்றல்