ஜனநாயக நாடுகள் பட்டியல் 51வது இடத்தில் இந்தியா : மக்கள் சுதந்திரம் பறிக்கப்பட்டதே காரணம்

புதுடெல்லி: உலக அளவில் ஜனநாயக முறையில் சிறந்து விளங்கும் நாடுகளின்  பட்டியலில், இந்தியா 10 இடங்கள் பின்தங்கி 51வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்தை தலைமை இடமாக கொண்டு  செயல்படும் பொருளாதார புலனாய்வு அமைப்பு, ஜனநாயகக் குறியீட்டின்  அடிப்படையில், உலக அளவில் ஜனநாயகத்தில் சிறந்து விளங்குகின்ற நாடுகளின்  பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.   தேர்தல்  செயல்முறை, பன்முகத்தன்மை, அரசின் செயல்பாடு, அரசியல் பங்கேற்பு,  அரசியல் கலாசாரம் மற்றும் மக்கள் சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக்  கொண்டு இந்தப் பட்டியல் வெளியிடப்படுகிறது. கடந்தாண்டுக்கான பட்டியலை இந்த அமைப்பு நேற்று வெளியிட்டது. இதில் ஆய்வில் பங்கேற்ற  167 நாடுகள் முழுமையான ஜனநாயகம், வீழ்ச்சியடைந்த ஜனநாயகம், கலப்பு ஜனநாயகம், சர்வாதிகார ஜனநாயகம் என்ற பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த பிரிவில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கி 51வது வீழ்ச்சி அடைந்த ஜனநாயக  நாடாக மதிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2018ல் 7.23 புள்ளிகளாக காணப்பட்ட நிலையில், 2019ல் இது 6.90 புள்ளிகளாக குறைந்து உள்ளது. காஷ்மீர்  சிறப்பு அந்தஸ்து நீக்கத்துக்கு பின், தொலைபேசி, இணையதள சேவைகள் முடக்கம்,  சிறுபான்மையினருக்கு எதிரான புதிய குடியுரிமைச் சட்டத்தால், வகுப்பு வாத  வன்முறைகள் தூண்டப்பட்டு மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டதால், இந்தியா  10 இடங்கள் சரிவடைந்து 51வது இடத்துக்கு தள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. முதலிடத்தில்  நார்வேயும், 2வது, 3வது இடங்களில் முறையே ஐஸ்லாந்து, சுவீடன் நாடுகளும்  உள்ளன. அண்டை நாடுகளான பாகிஸ்தான் 108, இலங்கை 69, வங்கதேசம் 80வது  இடங்களில் உள்ளன.

Related Stories: