நேபாளத்தில் மூச்சுத்திணறி பலியான 8 பயணிகளின் சடலம் இன்று கேரளா வருகை

காத்மாண்டு: நேபாளத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள செம்பழந்தி பகுதியை சேர்ந்தவர் பிரவீன் கிருஷ்ணன் நாயர். இவரது நண்பர் ரஞ்சித் குமார். இன்ஜினியரிங் கல்லூரி நண்பர்களான இவர்கள் இருவரும் தகவல் தொழில்நுட்ப பணியாளர்களாக பணியாற்றி வந்தனர். ரஞ்சித் திருவனந்தபுரத்திலும், பிரவீன் நாயர் துபாயிலும் பணியாற்றி வந்தனர். இவர்கள் தங்கள் குடும்பத்தினர் உள்பட 15 பேருடன் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றனர். அங்குள்ள மாக்வான்பூர் மாவட்டத்தின் மலை பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு திரும்பும் வழியில் டாமன் பகுதியில் உள்ள எவரெஸ்ட் பனோரமா ரிசார்ட்டில் கடந்த திங்கட்கிழமை இரவு தங்கினர். இதற்காக 4 அறைகளை வாடகைக்கு எடுத்த அவர்கள், ஒரு அறையில் 8 பேரும், மீதமுள்ள அறைகளில் 7 பேரும் தங்கினர்.

மறுநாள் காலை 8 பேர் தங்கியிருந்த அறையில் இருந்தவர்கள் அனைவரும் மூச்சுத்திணறி மயங்கி கிடந்தனர். காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்ததில் 8 பேரும் பலியானது தெரியவந்தது. இறந்தவர்கள் பிரவீன் கிருஷ்ணன் நாயர், சரண்யா சதி, பத்ர பிரவீன், ஆர்ச்சா பிரவீன், அபினவ் சரண்யா நாயர், ரஞ்சித் குமார், அவரது மனைவி இந்து லட்சுமி, வியாஷ்னவ் ரஞ்சித் என அடையாளம் காணப்பட்டது. இவர்களில் 4 பேர் குழந்தைகள்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குளிர் அதிகமாக இருந்ததால் ஹீட்டரை இயக்கி உடலை கதகதப்பாக வைத்திருக்க முயன்றபோது கேஸ் ஹீட்டரில் இருந்து கசிந்திருந்த விஷவாயு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் 8 பேரும் இறந்தது தெரியவந்தது.

ரஞ்சித்தின் மூத்த மகன் மாதவ் மற்றொரு அறையில் தூங்கியதால் அவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். இறந்தவர்கள் உடல்கள் காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  இதையடுத்து 8 பேரின் உடல்களும் இன்று கேரளாவுக்கு கொண்டு வரப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் செய்துள்ளது.

‘வேண்டாம் என்று தடுத்தும் ஹீட்டரை எடுத்து சென்றனர்’

சம்பவம் தொடர்பாக ரிசார்ட் மேலாளர் சிவா  கூறுகையில், `‘நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு இரவு உணவுக்கு பின்னர் 8 பேரும் தங்கள் அறைக்கு சென்றனர். அப்போது, குளிர் காய்வதற்காக எங்களிடம் ஹீட்டரை தருமாறு கேட்டனர். நாங்கள் எவ்வளவோ மறுத்தும், அதை கேட்காமல் அதிகாலை 2 மணியளவில் ரெஸ்டாராண்டில் இருந்த கேஸ் ஹீட்டரை அறைக்கு எடுத்து சென்று இயக்கியுள்ளனர். அப்போது அறைக்கதவு மற்றும் ஜன்னல்கள் மூடப்பட்டிருந்ததால் கேஸ் கசிந்து அறை முழுவதும் பரவியது. இதனால் அவர்களுக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மயங்கி உயிரிழந்துள்ளனர்,’’ என தெரிவித்தார்.

Related Stories: