இலங்கை உள்நாட்டு போரின் போது 20,000 தமிழர்கள் இறந்த விவகாரம் விசாரணை நடத்த அதிபர் முடிவு

கொழும்பு: இலங்கையில் உள்நாட்டு போரின் போது காணாமல் போன 20 ஆயிரம் தமிழர்கள் இறந்து விட்டதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்த நிலையில், காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்க விரும்புவதாகவும், ஆனால் இறந்தவர்களை மீட்டு வர முடியாது என்றும் அதிபர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையேயான உள்நாட்டு போர் 30 ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்தது. இதில், 1 லட்சம் பேர் பலியாகினர். குறிப்பாக, கடந்த 2009ல் நடந்த இறுதிக்கட்ட போரின் போது மட்டும், 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 20 ஆயிரம்  தமிழர்கள் காணாமல் போயுள்ளனர். ஆனால், இத்தகவல்களை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்து வந்தது.

காணாமல் போன 20 ஆயிரம் தமிழர்கள் இலங்கை ராணுவத்தின் பிடியிலேயே இன்னும் இருக்கலாம் என்றே அவர்களின் உறவினர்கள் நம்புகின்றனர்.

இந்நிலையில், காணாமல் போன 20 ஆயிரம் தமிழர்களும் இறந்துவிட்டதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே முதல் முறையாக நேற்று முன்தினம் அறிவித்தார். இந்நிலையில், அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘காணாமல்போன தமிழர்கள் இறந்துவிட்டதாக அதிபர் தெரிவித்துள்ள நிலையில், அவர்களை பற்றி விசாரணை நடத்தவே அவர் விரும்புகிறார். விசாரணைக்கு பின்னர் அவர்களுக்கான இறப்பு சான்றிதழ் வழங்கப்படும்’’ என கூறப்பட்டுள்ளது. இலங்கை சட்டத்தின்படி இறப்புச் சான்றிதழ் இல்லாமல், காணாமல் போனவர்களின் சொத்துகள், வங்கி பணம் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது.

Related Stories: