மங்களூரு விமான நிலையத்தில் குண்டு வைத்தவர் டிஜிபி.யிடம் சரண் : வேலை கிடைக்காத விரக்தியில் செய்தாராம்

பெங்களூரு: மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த வழக்கில்  தலைமறைவாக இருந்த வாலிபர், கர்நாடக டி.ஜி.பி அலுவலகத்தில் சரணடைந்தார். மங்களூரு விமான  நிலையத்தில் கடந்த 20ம் தேதி வெடிகுண்டு அடங்கிய பை கண்டெடுக்கப்பட்டது. இதே  போன்று பயணிகள் விமானத்தில் இருந்தும் குண்டு கண்டெடுக்கப்பட்டு பத்திரமாக  செயலிழப்பு செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மங்களூரு விமான நிலைய  சி.சி.டி.வி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, போலீசார் சம்பந்தப்பட்ட  வாலிபரின் வரைபடத்தை வெளியிட்டனர்.  இந்நிலையில்,  நேற்று காலை பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள கர்நாடக டி.ஜி.பி  அலுவலகம் சென்ற வாலிபர் ஒருவர், காவல்துறை இயக்குனர் நீலமணிராஜ் முன்பு  சரணடைந்தார். மங்களூரு விமான நிலையத்தில் குண்டு வைத்தது நான் என்று  ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை பிடித்த போலீசார் அல்சூர்கேட்  காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அந்த போலீசார் சென்று அவரை  கைது செய்து  தனி அறையில் வைத்து விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள்  வெளியானது. கைதானவர் உடுப்பி மாவட்டம், மணிப்பால் தாலுகா ஹட்கோ காலனியை  சேர்ந்த ஆதித்யா ராவ் என்று தெரியவந்தது.

தென் கனரா மாவட்டத்தில்  மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எம்பிஏ படிப்பை முடித்த ஆதித்யாராவ்,   வேலை கிடைக்காததால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கெம்பேகவுடா விமான நிலைய செக்யூரிட்டி கார்டு வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், இவருடைய படிப்புக்கும், வேலைக்கும் தொடர்பில்லை என்று நிராகரிக்கப்பட்டார். இதனால், விரக்தியடைந்த ஆதித்யாராவ் அதிகாரிகளை பழி வாங்கும் எண்ணத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.   விமான நிலைய அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில்  தனிப்படை போலீசாரால் ஆதித்யா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி கைது  செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவருக்கு 10 மாதம் 25 நாள் சிறை  காவல் வி்தித்து உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா  சிறையில் அடைக்கப்பட்டார்.

தண்டனை காலம் முடிந்து வெளியே  வந்த அவர் மீண்டும் வேலை தேடி அலைந்தார். பெற்றோரும், சகோதரரும் கைவிட்ட நிலையில் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற ஆதித்யா, குண்டு தயாரிப்பை யுடியூபில் பார்த்து தெரிந்து கொண்டார். பின்னர் வெடிகுண்டை பையில் வைத்து சுற்றித் திரிந்துள்ளார். இறுதியாக மங்களூரு விமான நிலைய கவுண்டரில் வைத்து விட்டு பெங்களூரு திரும்பியுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியதால் அச்சமடைந்த ஆதித்யாராவ், டிஜிபி அலுவலகத்தில் சரண அடைந்துள்ளார்.

இவ்வாறு விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் விசாரணைக்காக மங்களூரு அழைத்துச் சென்றனர்.

Related Stories: