கரும்பு சாகுபடி வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவ அரசு 6 கோடி நிதி

சென்னை: வேளாண் உற்பத்தி ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, ஈரோடு, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 11 கரும்பு சாகுபடிக்கேற்ற வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.  

நடப்பு ஆண்டிலும் 13 கரும்பு சாகுபடி வேளாண் இயந்திர வாடகை மையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசு ரூ.6 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்திற்கான பயனாளிகள் கூட்டுறவு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் ஒத்துழைப்புடன் தேர்வு செய்து, மாவட்ட ஆட்சியரால் அனுமதிக்கப்படுவார்கள். நடப்பு ஆண்டில் கரும்பு இயந்திர வாடகை மையங்கள் அமைப்பதற்கு, இதுவரை, 10 முன்னோடி விவசாயிகள் / தொழில் முனைவோர் முன்வந்துள்ளனர்.

இந்த மையத்தில் உள்ள இயந்திரங்கள் கரும்பு விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படும். மையங்களை அமைக்க முன்வருபவர்கள் தங்களின் விருப்பத்திற்கிணங்க, வேளாண்மை பொறியியல் துறையினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து தங்களுக்கு தேவையான மாடல்களை தேர்வு செய்து  கொள்ளலாம். இதற்கான வாடகை சர்க்கரை ஆலை மூலம், விவசாயிகளின் கரும்பு தொகையில் பிடித்தம் செய்து வாடகை மையத்திற்கு தரப்படும்.எனவே, அரசு மானியத்தை பயன்படுத்தி கரும்பு சாகுபடி இயந்திர வாடகை மையம் அமைக்க விரும்புவோர் உடனடியாக வேளாண்மை பொறியியல் துறையின் வருவாய் கோட்ட உதவி செயற் பொறியாளர் அல்லது மாவட்ட அளவில் செயற் பொறியாளர் அலுவலகங்களை அணுகி, விண்ணப்பித்து பயன் பெறலாம்.

Related Stories: