செயற்கை நுண்ணறிவு தகவலை வரன்முறை படுத்த வேண்டும் : உலக நாடுகளுக்கு சுந்தர் பிச்சை கோரிக்கை

டாவோஸ்: சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார கூட்டமைப்பின் 2020ம் ஆண்டு உச்சி மாநாடு, நேற்று முன்தினம் தொடங்கியது. இம்மாநாடு நாளையுடன் முடிகிறது. இதில் கலந்து கொண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை பேசியதாவது: அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க முக்கியத்துவம் அளிக்கின்றன. இதனால் அனைவருக்கும் சுதந்திரமான, வெளிப்படையான இணைய தள சேவை தேவைப்படுகிறது. அதே நேரம், அது பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும். எனவே, தகவல் பாதுகாப்பு கட்டமைப்பு விதிகளை உருவாக்குவதில் அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும். இணைய தளம் என்பது மிக உயர்ந்த, அரிய கண்டுபிடிப்பாகும். மனித வாழ்வில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றி உள்ளது. அப்படி, அண்மையில் கண்டு வியந்தது தான், மருத்துவம், வானிலை ஆகியவற்றில் முக்கிய பங்காற்றும் செயற்கை நுண்ணறிவு திறன். இதில், குவாண்டம் கம்யூட்டிங் முக்கிய பங்கு வகிக்கும்.

இதனைக் கொண்டு, இயற்கை, வானிலை, பருவநிலை மாற்றத்தை தற்போதை விட துல்லியமாக கணிக்க முடியும். எதிர்காலத்தில் தகவல் தொழில்நுட்பத்தின் களஞ்சியமாக இது திகழும் என்பதில் சந்தேகமில்லை. இதற்காக உலக நாடுகள் ஏராளமான முயற்சிகள் எடுக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்யூட்டிங் கலவை மிகவும் ஆச்சரியமளிக்க கூடிய ஒன்று. அத்துடன் உயிரியலும் இணையும் போது மிகப் பெரிய பலன்கள் கிடைக்கும். ஆனால், அவற்றை உலக நாடுகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். உலக அமைதி, வளத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, இதற்கான தகவல் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்க அனைத்து நாடுகளும் முன் வர வேண்டும். இவ்வாறு சுந்தர் பிச்சை பேசினார்.

Related Stories: