பொங்கல் பரிசு தொகுப்பு, 1000 1,98, 34,221 பயனாளிகள் பெற்றனர் : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 ரொக்கத் தொகையை அரிசி பெறும் குடும்ப  அட்டைதாரர்கள் 1,98,34,221 பயனாளிகள் பெற்றுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து உணவு துறை காமராஜ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2020ம் ஆண்டு பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீள கரும்பு துண்டு  உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கத் தொகை ரூ.1,000 அரசால் வழங்கப்பட்டது.

30.11.2019ம் மாதத்தில் நடைமுறையில் இருந்த குடும்ப அட்டைகள் எண்ணிக்கை 1,95,05,846 ஆகும். மேலும், சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைதாரர்கள் அரிசி விருப்ப குடும்ப அட்டையாக மாற்றம் செய்துகொள்ள அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் 4,51,614 சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களது விருப்பத்தின்படி அரிசி விருப்ப குடும்ப அட்டையாக மாற்றம் செய்யப்பட்டது. அவர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. 31.12.2019 நிலவரப்படி புதிதாக அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்ட அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களையும் சேர்த்து மொத்தம் 2,00,30,431 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை ரூ.1000 ரொக்கம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 9ம் தேதியில் இருந்து 21ம் தேதி வரை அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 1,98,15,337 மற்றும் இலங்கை தமிழர் குடும்பங்கள் 18884 ஆக மொத்தம் 1,98,34,221 பயனாளிகள் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.1000 பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: