வியாசர்பாடி பேசின் பாலம் அருகே சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்: வாகன ஓட்டிகள் கடும் அவதி

பெரம்பூர்: பேசின் பாலம் அருகில் வெளியேறும் கழிவுநீரால் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட நான்காவது மண்டலம் 46வது வார்டு எருக்கஞ்சேரி ஐ ரோடு வியாசர்பாடி பேசின் மேம்பாலம் கீழ் பகுதியில் ரயில்வே இடத்திற்கு சொந்தமான இடம் உள்ளது. இங்கிருந்து நாள்தோறும் கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடுகிறது. இந்த கழிவுநீர் சாலையோரம் உள்ள ராட்சத பள்ளங்களில் மாதக்கணக்கில் தேங்கி நிற்பதால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதி ஆழமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘நாள்தோறும் இங்கு பேசின் பாலத்தின் கீழ்ப்புறம் அதிக அளவில் கழிவு நீர் வெளியேறுகிறது. அங்கு உள்ள பள்ளங்களில் கழிவுநீர் வந்து நிரம்பி கொசுக்கள் உற்பத்தி ஆகின்றன. மேலும் இதில், மணல் துகள்கள் கலந்து விடுவதால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் பெரும்பாலும் இந்த சகதியில் மாட்டி வழுக்கி விழும் நிலை ஏற்படுகிறது.நாள்தோறும் வடசென்னையில் இருந்து பெரும்பாலான மக்கள் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கு பேசின் பாலம் வழியாகவே செல்கின்றனர்.

அப்படி காலையில் நல்ல உடை அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அருகில் உள்ள கழிவுநீர் பள்ளத்தில் கனரக வாகனங்கள் சென்றால் உடைகளில் கழிவுநீர் பட்டு சேறும் சகதியும் உடன் அலுவலகத்திற்கு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் இந்த ராட்சத பள்ளங்களால் அதிக விபத்து ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வெளியேறுவதை சரி செய்ய வேண்டும். அதேபோல் சாலையில் உள்ள ராட்சத பள்ளங்களை சீரமைத்து வாகன ஓட்டிகள் அச்சமின்றி செல்ல வழிவகை செய்ய உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: