தாம்பரம் திருமலை நகர் பகுதியில் இலவச வேட்டி, சேலை கொடுப்பதில் குளறுபடி: பொதுமக்கள் சரமாரி புகார்

தாம்பரம்: திருமலை நகர் பகுதியில் பொங்கல் வேட்டி, சேலை கொடுப்பதில் குளறுபடி உள்ளதாக பொதுமக்கள் சரமாரியாக குற்றம்சாட்டுகின்றனர். தாம்பரம் அடுத்த திருமலை நகர், 5வது தெருவில் ஜே.டி. 110 என்ற ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் அப்பகுதியில் உள்ள 1200 பேருக்கு ரேஷன் அட்டை உள்ளது. ஆனால் இந்த 1200 பேரில் வெறும் 400 பேருக்கு மட்டுமே பொங்கல் வேட்டி, சேலை கொடுக்கப்பட்டதாகவும், மீதமுள்ளவர்களுக்கு பொங்கல் வேட்டி, சேலை கொடுக்காமல் இருப்பதாகவும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் திருமலை நகர், 5வது தெருவிலுள்ள ஜே.டி. 110 ரேஷன் கடையில் இந்த வருடம் மட்டும் இல்லாமல் கடந்த 3 வருடங்களாக பொதுமக்களுக்கு பொங்கல் பொருட்களை முறையாக கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்த கடையில் உள்ள 1200 ரேஷன் அட்டைகளில் 400 ரேஷன் அட்டைகளுக்கு மட்டுமே இந்த ஆண்டு வேட்டி, சேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரேஷன் கடையில் உள்ள ஊழியரிடம் கேட்டால் 400 பேருக்கு மட்டுமே வேட்டி, சேலைகள் வந்ததாக கூறுகிறார். ஆனால் செம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விசாரித்தால் 850லிருந்து 900 பேருக்கு வேட்டி, சேலைகள் கடந்த 10ம் தேதியே கொடுத்துவிட்டதாக கூறுகின்றனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து விடுபட்டுள்ள பொதுமக்களுக்கு பொங்கல் வேட்டி, சேலைகளை வழங்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: