×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் குவித்தோவா: கோகோ முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் நேற்று மோதிய குவித்தோவா 7-5, 7-5 என்ற நேர் செட்களில் போராடி வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 38 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு 2வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்தி (ஆஸி.) 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ஸ்லோவேனியாவின் போலோனா ஹெர்காகை வீழ்த்தினார். அமெரிக்க வீராங்கனைகள் செரீனா வில்லியம்ஸ், கோகோ காப், மேடிசன் கீஸ், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, நவோமி ஒசாகா (ஜப்பான்), ஜூலியா கோயர்ஜஸ் (ஜெர்மனி), சுவாரெஸ் நவர்ரோ (ஸ்பெயின்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் நடப்பு சாம்பியன் நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-4, 6-2 என்ற நேர் செட்களில் ஜப்பானின் டட்சுமா இடோவை வீழ்த்தினார். சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தனது 2வது சுற்றில் 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் செர்பியாவின் கிராஜினோவிச்சை வென்றார். முன்னணி வீரர்கள் மரின் சிலிச் (குரோஷியா), பாடிஸ்டா அகுத் (ஸ்பெயின்), சிட்சிபாஸ் (கிரீஸ்), மிலோஸ் ரயோனிச் (கனடா), பாக்னினி (இத்தாலி) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறினர். பல்கேரியா வீரர் கிரிகோர் திமித்ரோவ் (18வது ரேங்க்) தனது 2வது சுற்றில் 4-6, 6-7 (6-8), 6-3, 7-6 (7-3), 6-7 (3-10) என 5 செட்களில் அமெரிக்காவின் டாமி பாலிடம் போராடி தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 4 மணி, 19 நிமிடத்துக்கு நீடித்தது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திவிஜ் ஷரண் - அர்டெம் சிடாக் (நியூசி.) ஜோடி 6-4, 7-5 என்ற நேர் செட்களில் கரினோ புஸ்டா (ஸ்பெயின்) - ஜோ சோசா (போர்ச்சுகல்) ஜோடியை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - உச்சியாமா (ஜப்பான்) ஜோடி 1-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் பாப் பிரையன் - மைக் பிரையன் இணையிடம் தோல்வியைத் தழுவியது.

Tags : round ,Australian Open , Australian, Open Tennis, 3rd, Quittova, Coco, Progress
× RELATED ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து