பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக பேட்டரி கார் கனவு நிறைவேறுமா? லித்தியம் தட்டுப்பாட்டால் சிக்கல்: சீனாவை நம்ப வேண்டிய கட்டாயம்

புதுடெல்லி: சுற்றுச்சூழல் மாசுவை குறைக்கும் வகையிலும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கு மாற்றாகவும் பேட்டரி வாகன பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால் இந்த வாகனங்களுக்கு மிக முக்கிய ஆதாரமாக கருதப்படுவது பேட்டரிதான். உள்நாட்டிலேயே இவற்றை தயாரிக்க வேண்டும் என்றால் லித்தியம் தேவை. இதற்காக, முதன்முதலாக இந்தியாவில் லித்தியம் சுத்திகரிப்பு தொழிற்சாலையை தனியார் நிறுவனம் ஒன்று நிறுவுகிறது. இந்த நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பேட்டரி வாகனங்களுக்கு மிக முக்கிய தேவையான பேட்டரியை தயாரிக்க லித்தியம் அவசியம். ஆனால் இந்த ரசாயனத்தை சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. இதுபோல் கேத்தோட், பேட்டரி செல் உட்பட பேட்டரி தயாரிப்புக்கான முக்கிய பொருட்களுக்கும் சீனாவை நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவில் லித்தியம் இல்லை.

இந்தியாவில் லித்தியம் சுத்திகரிப்பு தொழிற்சாலை நிறுவ ஆஸ்திரேலிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம். இந்த தொழிற்சாலையில் 10,000 முதல் 15,000 டன் லித்தியம் உற்பத்தி திறன் கொண்டதாக இருக்கும். ஆனால், 2030ல் இந்தியாவின் லித்தியம் தேவை 2,00,000 டன்களாக இருக்கும். எனவே, உள்நாட்டு உற்பத்தியை நம்பி இலக்கை எட்ட முடியாது. எனவே, அரசு எதிர்பார்க்கும் அளவுக்கு பேட்டரி வாகன சந்தை வேகமாக வளர வாய்ப்பில்லை என்றார். மேலும், சீன தொழிற்சாலைகளில் இந்தியாவுக்கு தேவையான பேட்டரிகளை உற்பத்தி செய்து இறக்குமதி செய்யலாமா என்ற திட்டமும் உள்ளது. இருப்பினும் லித்தியம் தேவைக்கு வெளிநாடுகளை மட்டுமே நம்பியுள்ளதால், உலகின் பேட்டரி வாகன சந்தை உற்பத்திய மையமாக இந்தியாவை ஆக்கும் மத்திய அரசின் கனவுக்கு லித்தியம் தட்டுப்பாட்டால் சிக்கல் ஏற்படும் என்கின்றனர் தொழில்துறையினர்.

Related Stories: