தலைப்பாகையில் மறைத்து கடத்திய ரூ.1.3 கோடி தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது

சென்னை: விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் ரூ.1.3 கோடி மதிப்புடைய 3.2 கிலோ தங்க நகைகளை அதிகாரிகள் கைப்பற்றி, 5 பேரை கைது செய்தனர். இலங்கையில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் இலங்கையை சேர்ந்த சந்திரகுமார் (23), முகமது குசைத் (27) ஆகிய இருவரும் சுற்றுலா பயணிகளாக வந்தனர். அவர்களை சோதனை செய்தபோது உள்ளாடைகளில் 950 கிராம் தங்க நகைகள் இருந்தது. அதன் மதிப்பு 39.17 லட்சம். அவற்றை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் துபாயில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு எமரேட் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் தஞ்சாவூரை சேர்ந்த மாதவன் (21) சுற்றுலா பயணியாக துபாய் சென்றுவிட்டு வந்தார்.

சோதனையில் அவரது சூட்கேசில் உள்ள ரகசிய அறையில் 400 கிராம் எடை உடைய 4 தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு 16.45 லட்சம். அதனை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையே தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நகரை சேர்ந்த தாய்சுப்ரீங் சிங் (34), டாமன் பிரீப் சிங் (25) ஆகிய இருவரும் தாய்லாந்துக்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு வந்திருந்தனர். அவர்களது தலைப்பாகையை சோதனை செய்தபோது ஒரு கிலோ 800 கிராம் எடை தங்க கட்டிகள் இருந்தன. அதன் சர்வதேச மதிப்பு 74.2 லட்சம். பிறகு அதிகாரிகள் கடத்தல் ஆசாமிகளை கைது செய்து தங்க கட்டிகள் மற்றும் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories: