தனி சாப்ட்வேர்களை உருவாக்கி ரயில்வே டிக்கெட் முன்பதிவு: இ-டிக்கெட் மோசடியில் மாதம் ரூ15 கோடி வருவாய்

* தீவிரவாத கும்பலுக்கு நிதி உதவி செய்த 2 பேர் கைது

* 3,000 வங்கி கிளைகளின் கணக்கில் புகுந்து கைவரிசை

புதுடெல்லி: தனி சாப்ட்வேர்களை உருவாக்கி ரயில்வே டிக்கெட் முன்பதிவு இணையத்தில் புகுந்து, மாதம் ரூ15 கோடி வரை வருவாய் பார்த்த கும்பலை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் தீவிரவாத கும்பலுக்கு நிதி சப்ளை செய்தது தெரியவந்தது. கிட்டதிட்ட 3,000 வங்கி கிளைகளின் கணக்கில் புகுந்து கைவரிசை காட்டியது அம்பலமாகி உள்ளது. ரயில்வே இணைய டிக்கெட் மோசடியில் ஜார்க்கண்ட்டை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் குலாம் முஸ்தபா (28) என்ற நபரை ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று கைது செய்தனர். இவர் தலைமையில் செயல்பட்டு வந்த கும்பல் பலரின் ஐ.ஆர்.சி.டி.சி. பயனாளர் குறியீட்டை திருடி பல கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்தது தெரியவந்தது. இந்த நிதி பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை தலைமை இயக்குநர் அருண் குமார் கூறுைகயில், ‘‘துபாயை சேர்ந்த கும்பல் ஒன்று இணைய வழி ரயில் டிக்கெட் மோசடியில்  ஈடுபட்டுள்ளது. விற்பனை செய்த பணம் வங்கிகளுக்கு  அனுப்பப்பட்டு, பின்னர் அவை ஹவாலா மூலம் துபாய்க்கு சென்றுள்ளது. பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளிலும்  இக்கும்பலுக்கு தொடர்பு உள்ளது. இப்பணம் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக ஹமீத் அஷ்ரப், குலாம் முஸ்தபா என்ற இருவரை கைது செய்து விசாரிக்கிறோம். இந்த கும்பல் ஒரு மாதத்திற்கு 10 முதல் 15 கோடி ரூபாய் வரை டிக்கெட்டுகளை  முன்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்டு வருவாய் பார்த்துள்ளது’’ என்றார். இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: புவனேஸ்வரில் கைது செய்யப்பட்ட குலாம் முஸ்தபா என்பவர் மோசடிக்காக புரோகிராமராக பணியாற்றுகிறார்.

2015ம் ஆண்டில் பெங்களூருவில் டிக்கெட்டுகளை மோசடியாக விற்று தனது வாழ்க்கையைத் தொடங்கினார். கடந்த 10 நாட்களாக, உளவு துறை, என்ஐஏ, கர்நாடக போலீசார் முஸ்தபாவை விசாரித்தனர். பணமோசடி மற்றும் தீவிரவாத நிதியுதவியின் பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக தெரிகிறது. முஸ்தபாவிடம் 563 தனிப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி பயனர் ஐடிகள் உள்ளன. மேலும் 2,400 எஸ்பிஐ கிளைகள் மற்றும் 600 பிராந்திய கிராமப்புற வங்கிகளின் பட்டியல் உள்ளது. அங்கு அவர் கணக்கு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. முஸ்தபா, டார்க்நெட்டை அணுக தனியான மென்பொருளைப் பயன்படுத்தி உள்ளார். ‘லினக்ஸ்’ அடிப்படையிலான ஹேக்கிங் அமைப்புகள் அவரது மடிக்கணினியில் காணப்பட்டன. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கிளைகளைக் கொண்ட ஒரு இந்திய மென்பொருள் நிறுவனமும் மோசடிக்கு தொடர்பில் உள்ளது.

சிங்கப்பூரில் பணமோசடி வழக்கில் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது. முஸ்தபாவின் தொலைபேசியில் பல பாகிஸ்தான், பங்களாதேஷ், மத்திய கிழக்கு, இந்தோனேசிய, நேபாளி எண்கள் உள்ளன. போலி ஆதார் அட்டைகளை உருவாக்க ஒரு சாப்ட்வேரும் இருந்தது. முஸ்தபாவின் மடிக்கணினிகளை பகுப்பாய்வு செய்தபோது, அவர் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட மதக் குழுவை பின்பற்றுபவர் என்பது தெரியவந்தது. மோசடியின் சூத்திரதாரியாக முஸ்தபா இருந்துள்ளார். மாதத்திற்கு ரூ.10-15 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. மென்பொருள் உருவாக்குநராக இருக்கும் அஷ்ரப், 2019ல் உத்தரபிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் ஒரு பள்ளி மீது குண்டுவெடிப்பில் தொடர்புடையவர். இப்போது அவர் துபாய்க்கு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த மோசடி கும்பலின் முதல் நோக்கம் பணத்தை பல்வேறு வகைகளில் திரட்டுவது, அதன்பின் தீவிரவாத நிதியுதவிக்காக திருப்பி விடுவர்.

அவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் தீவிரவாத நிதி மற்றும் பணமோசடிக்கு உள்ள தொடர்பை காட்டுகின்றன. இந்தியாவில் 18 முதல் 20 முன்னணி விற்பனையாளர்கள் அல்லது சூப்பர் அட்மின்கள் உள்ளனர். அவர்கள்தான் பணத்தை கையாளுகின்றனர். பல்வேறு ஹவாலா கணக்குகள் மற்றும் கிரிப்டோ நாணயம் மூலம் ஹமீதுக்கு பணத்தை அனுப்பி உள்ளனர். கும்பலின் நிதி நிர்வாகத்தில் கவனித்து வந்த ‘குருஜி’ என்று அழைக்கப்படும் மற்றொரு நபரை புலனாய்வு அமைப்பினர் தேடி வருகின்றனர். சட்டவிரோத மென்பொருளான ஏ.என்.எம்.எஸ் என்பதுதான், ஐ.ஆர்.சி.டி.சி-யின் உள்நுழைவு கேப்சனாக உள்ளது. அதன்மூலம் முன்பதிவு பக்கத்தில் நுழைந்து, வங்கி ஓடிபி-க்களை கொண்டு மோசடி டிக்கெட்டுகளை உருவாக்குகிறது.

ஒரு உண்மையான பயனருக்கு, முன்பதிவு செயல்முறை வழக்கமாக சுமார் 2.55 நிமிடங்கள் ஆகும்; ஆனால் மென்பொருளுக்கு இது 1.48 நிமிடங்களில் முடிந்துவிடும். இதனால் டிக்கெட்டுகளை மிக வேகமாக முன்பதிவு செய்யலாம். இவர்களின் மோசடியால் ரயில்வே நிர்வாகத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் தொடர்புடைய மேலும் சில முக்கிய புள்ளிகளை தேடி வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: